2013-11-02 14:48:32

கிறிஸ்தவர்கள் துன்பங்களையும் சோதனைகளையும் எப்படி எதிர்கொள்வதென அறிந்திருக்கின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.01,2013. ஆண்டவரில் நம்பிக்கை மற்றும் அமைதியில், துன்பங்களையும் சோதனைகளையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்வதென கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி ஏறத்தாழ தினமும் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படுகின்றது.
மேலும், ருமேனியாவில் கம்யூனிச ஆட்சியின்போது 1951ம் ஆண்டில் கொல்லப்பட்ட ஆயர் Anton Durcovici அவர்களின் மறைசாட்சி வாழ்வையும், அமெரிக்க ஐக்கிய நாடு, அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் பிறந்த மூன்று அருள்சகோதரிகளின் வீரத்துவமான புனித வாழ்வையும் இவ்வியாழனன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம் இந்த நால்வரையும் வணக்கத்துக்குரியவர்கள் என அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அறிவிப்பு, இவர்களை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு உதவும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Ohio மாநிலத்தில் Glendaleல் 1895ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த அருள்சகோதரி Celestine Bottego, மரியின் சவேரியன் மறைப்போதக சகோதரிகள் சபையை நிறுவியவர்.
1718ம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்த அருள்சகோதரி Honora "Nano" Nagle, புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.
1910ம் ஆண்டு இத்தாலியின் Vicenzaவில் பிறந்த அருள்சகோதரி Olga Gugelmo, திருஅவையின் புதல்வியர் சபையை நிறுவியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.