2013-11-02 14:50:49

அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கம் வனம் போல வளர்ந்து வருகின்றது, கர்தினால் மாராதியாகா


நவ.02,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வளர்ந்து வரும் கத்தோலிக்கத் திருஅவை, வாழ்வதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நற்செய்தி அறிவிக்க வேண்டும் மற்றும் ஏழைகளின் திருஅவையாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஹொண்டூராஸ் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகெஸ் மாராதியாகா.
நற்செய்தியை புதிய முறையில் அறிவிப்பதன் முக்கியம் குறித்து, டல்லஸ் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அண்மையில் உரையாற்றிய கர்தினால் மாராதியாகா, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கத் திருஅவை, வனம் போன்று சப்தம் போடாமல் வளர்ந்து வருகின்றது என்று கூறினார்.
மரம் விழும்போது அதிக சப்தம் கேட்கிறது, ஆயினும், வளர்ந்துவரும் முழுக் காடும் சப்தம் எழுப்புவதில்லை, அமெரிக்கத் திருஅவையின் நிலையும் இதுதான் என்றும் உரைத்தார், திருப்பீடத்தின் சீர்திருத்தத்துக்குத் திருத்தந்தைக்கு உதவும் எட்டு கர்தினால்களில் ஒருவராகிய கர்தினால் மாராதியாகா.
2002ம் ஆண்டில் இரண்டு இலட்சம் அமெரிக்கர்கள் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் மாராதியாகா, எல்லாமே சுடர்விடுவதில்லை, எல்லாமே துர்மாதிரிகையும் பாவமும் அல்ல, இந்நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தி உயிரோட்டமாக இருக்கின்றது என்றும் பாராட்டினார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.