2013-11-01 14:59:27

திருத்தந்தை பிரான்சிஸ் : புனிதராக வாழ்வது நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு


நவ.01,2013. புனிதர்கள் தெய்வ மனிதர்களோ அல்லது நிறைவான மனிதர்களோ அல்ல, மாறாக, அவர்கள் நம்மைப்போன்று, நம் ஒவ்வொருவரைப்போன்று இருந்தவர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ ஒரு இலட்சம் திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனிதர்கள் இறைவனின் நண்பர்கள், இறைவனின் வாக்குறுதி பொய்க்காது என்று அவர்கள் நமக்கு உறுதியளிக்கின்றனர் என்று கூறினார்.
புனிதர்கள் விண்ணக மகிமையை அடைவதற்கு முன்னர், இவ்வுலகின் இன்பங்கள், துன்பங்கள், போராட்டங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு சாதாரண வாழ்வு வாழ்ந்தவர்கள், ஆயினும் அவர்களது வாழ்வை இறைவனின் அன்பு பற்றிய அறிவே மாற்றியது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
புனிதர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்களைத் தாங்கி, பகைவர்களை வெறுக்காமல், தீமையை நன்மையால் வென்று, மகிழ்ச்சியையும் அமைதியையும் பரப்பியவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, புனிதராக மாறுவது சிலருக்குக் கிடைத்த சலுகை அல்ல, மாறாக, அது ஒவ்வொருவருக்குமான அழைப்பு என்றும் கூறினார்.
எனவே நாம் தூய்மையான பாதையில் நடப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், இந்தப் பாதைக்குப் பெயரும் முகமும் உண்டு, அது இயேசு கிறிஸ்து என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது வாழ்க்கையின் இருப்பு மரணம் அல்ல, மாறாக விண்ணகம் என்றும் மூவேளை செப உரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.