2013-11-01 15:08:45

இந்தியாவில் சிறாரின் நலவாழ்வையும், கண்தானங்களையும் ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்க அதிகாரிகள் முயற்சி


நவ.01,2013. இந்தியாவில் சிறாரின் நலவாழ்வையும், கண்தானங்களையும் ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்க அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர் என்று CHAI எனப்படும் இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழக இயக்குனர் அருள்பணி டோமி தாமஸ் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த அருள்பணி தாமஸ், சிறார் சத்துணவு உண்பதையும், உடல்பயிற்சி செய்வதையும் CHAI கழக உறுப்பினர்கள் ஊக்குவிப்பார்கள் என்று கூறினார்.
இறந்த உடல்கள் சிதைவைக்கப்படும்போது, கண்கள் எரிக்கப்படவோ அல்லது புதைக்கப்படவோ தகுதியுடையவை அல்ல, ஏனெனில் கண்கள் விலையேறப்பெற்றவை என்று சொல்லி, தங்களது கழகம் கண்தானங்களையும் ஊக்குவிப்பதாகப் பகிர்ந்து கொண்டார் அருள்பணி தாமஸ்.
கடந்த அக்டோபரில் CHAI கழகம் நடத்திய 70வது மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 800க்கும் அதிகமானோர் கண்தானங்கள் செய்வதற்கு உறுதியளித்ததாகவும் அருள்பணி தாமஸ் கூறினார்.
மேலும், இக்காலத்தில் சிறார் அதிகமாக விளையாடுவதில்லை, உண்மையான விளையாட்டுக்களை விளையாடுவதில்லை, பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகளைச் சாப்பிடுகின்றனர், வேதியப்பொருள்கள் கலந்த குளிர்பானங்களைக் குடிக்கின்றனர், இவை கடும் நலவாழ்வுச் சீர்கேடுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்று இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுச் செயலர் அருள்பணி Joseph Manipadam கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சாரப் பணிக்குழுவில் 20 ஆயிரம் கத்தோலிக்கப் பள்ளிகளும், 600க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பிற கத்தோலிக்க நிறுவனங்களும் உள்ளடங்கும்.
1943ம் ஆண்டில் நிறுவப்பட்ட CHAI கழகத்தில் 3,400க்கு மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்க மருத்துவ அருள்சகோதரிகளும், 25 ஆயிரம் தாதியர் அருள்சகோதரிகளும், 10,000த்துக்கு அதிகமான மருத்துவப் பணியாளர்களும் உள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.