2013-10-31 16:02:03

வறியோருக்கு உதவுதல் என்பது, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அடிப்படையான ஓர் அழைப்பு - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.31,2013. மனித சமுதாயத்தில் தீராமல் தொடர்கின்ற வறுமையின் பல்வேறு வடிவங்களுக்குப் பதில் அளிப்பதில் தீவிரமாகத் தன்னையே அர்ப்பணம் செய்பவரே ஆண்டவரின் உண்மையான சீடர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
'புனித பேதுருவின் நண்பர் வட்டம்' என்ற பெயரில் இயங்கிவரும் ஒரு பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினர் திருப்பீடத்திற்கு உறுதுணையாக ஆற்றிவரும் பிறரன்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
வறியோருக்கு உதவுதல் என்பது, தனிப்பட்ட, குறிக்கப்பட்ட அழைப்பு என்று எண்ணாமல், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள பொதுவான, அடிப்படையான ஓர் அழைப்பு என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உரோம் நகரில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பராமரிக்கும் பணிக்கென 'பேதுருவின் காசு' என்ற பெயரில், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் 'புனித பேதுருவின் நண்பர் வட்டத்’தைச் சார்ந்தவர்கள், ஆலயப் பராமரிப்புடன், மக்க்களைக் கட்டியெழுப்பும் பணியிலும் ஈடுபட்டிருப்பது, நிறைவைத் தருகிறதென திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.
நிதியுதவி என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல், இவ்வமைப்பினர் தங்கள் செபங்களால் ஆன்மீக உறுதுணையும் வழங்கி வருவதற்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வையும், நன்றியையும் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.