2013-10-31 16:06:49

உலகத்தலைவர்களின் தரவரிசைப்பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4ம் நிலை


அக்.31,2013. மக்களின் சிந்தனைகளில் பாதிப்புகளை உருவாக்கும் உலகத்தலைவர்களின் தரவரிசைப்பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 4ம் நிலையில் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் Forbes என்ற வர்த்தக இதழ், மக்களின் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்கும் சக்தி பெற்ற உலகத்தலைவர் யார் என்ற கேள்வியின் அடிப்படையில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாயின. மக்களின் எண்ணங்களில் மற்றங்களை உருவாக்கும் உலகத்தலைவர்களின் வரிசையில், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin முதல் இடத்திலும், அமெரிக்க மற்றும் சீன அரசுத்தலைவர்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலக அரசு என்ற அளவில், அதிகாரம் எதுவும் பெறாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த வரிசையில் நான்காவது இடம்பெற்றிருப்பது, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகாரம் என்பது ஆளுமை செய்வதற்கல்ல், மாறாக, பணி செய்வதற்கே என்பதை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எளிமை, பரிவு, ஆகிய பண்புகளால் இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கிறார் என்பதை Forbes இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : Vatican Insider








All the contents on this site are copyrighted ©.