2013-10-30 16:30:18

மனித சமுதாயத்தில், வறியோர் ஒதுக்கப்படுவதே உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆணிவேர் - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்


அக்.30,2013. உணவு, அனைத்து மனிதர்களின் அடிப்படை தேவை என்பதையும், உரிமை என்பதையும் உலக நாடுகள் உணர்ந்தாலும், உணவு நெருக்கடியை பல நாடுகள் சந்தித்து வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. அமைப்பின் கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் 68வது அமர்வில், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
வறுமையின் ஏனையப் பிரச்சனைகளில் நிகழ்வதுபோலவே, மனித சமுதாயத்தில், வறியோர் ஒதுக்கப்படுவதே உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆணிவேர் என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு திட்டத்திலும் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, வறுமை, பட்டினி ஆகியவற்றைப் போக்கும் திட்டங்களில் வறியோர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் வலியுறுத்தினார்.
வறியோரை உள்ளடக்கித் தீட்டப்படும் திட்டங்களால், உலகில் வீணாக்கப்படும் உணவு குறைக்கப்பட்டு, பசியற்ற மனிதர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.