2013-10-29 16:14:37

விவிலியத்
தேடல் செல்வரும் இலாசரும் உவமை – பகுதி 4


RealAudioMP3 செல்வரும், அவர் வீட்டு வாசலில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஏழை இலாசரும் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்வின் விளைவுகளை மறு உலகில் அனுபவித்தனர். செல்வர், மறு உலகில், தீப்பிழம்பில் வெந்து வேதனைப்பட்டார். இலாசரோ, ஆபிரகாமின் மடியில் சேர்க்கப்பட்டார். செல்வர் இவ்வுலகில் வாழ்ந்தபோது குற்றமேதும் செய்ததாக இயேசு குறிப்பிடவில்லை. "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்" (லூக்கா 16: 19) என்று மட்டுமே இயேசு குறிப்பிடுகிறார். மற்றபடி, தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரை, அவமானப்படுத்தியதாகவோ, துன்புறுத்தியதாகவோ, விரட்டியடித்ததாகவோ செல்வர் மீது குற்றங்கள் சுமத்தப்படவில்லை.
தவறு ஏதும் செய்யாதபோது அவருக்கு ஏன் நரக தண்டனை? என்ற கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஒருவர் செய்யும் தவறுகளுக்காகத் தண்டனை பெறுதல் என்பது, இவ்வுலக நீதியின் அளவுகோல். இந்த அளவுகோல் உண்மையாகவேக் கடைபிடிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் பல முறை உலகில் எழுகிறது. சிறைக் கைதிகளுக்கு பணியாற்றும் அருள் பணியாளர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் சந்தித்தபோது சொன்ன கருத்து, 'செய்யும் குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை' என்ற உலக நியதியைக் கேள்விக்குறியாக்கியது.
பெரும் குற்றங்கள் புரிவோரை, ‘கொழுத்துப்போன மீன்கள்’ என்று உருவகப்படுத்தி திருத்தந்தை பேசியது, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. கொழுத்துப்போன பெரிய மீன்கள் தடையின்றி இவ்வுலகக் கடலில் நீந்திவருகின்றன; அதே நேரம், சிறு தவறுகளில் பிடிபடுவோர் சட்டம் என்ற தூண்டிலில் சிக்கி, சிறைகளில் துன்புறுகின்றனர் என்று திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டார்.

செய்த குற்றங்களுக்குத் தண்டனை என்பது பொதுவாக இவ்வுலக நீதியின் அளவுகோல். ஆனால், செய்யத் தவறிய, அல்லது செய்ய மறுத்த நன்மைகளுக்காக, (அவற்றை கடமை என்றும் சொல்லலாம்...) தண்டனை பெறுதல் என்பது மறு உலக நீதியின் அளவுகோல்.
ஒவ்வொருநாளும் நாம் கொண்டாடும் திருப்பலியின் துவக்கத்தில், குற்றங்களுக்கு, பாவங்களுக்கு இறைவனிடமும், அடுத்தவரிடமும் மன்னிப்பு கேட்கிறோம். அப்போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை:
"எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர, சகோதரிகளே உங்களிடமும் நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாவ அறிக்கையில், தொடர்ந்து நாம் சொல்வது இதுதான்: "என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்." கடமையில் தவறுவதையும் பாவம் என்று நாம் அறிக்கையிடுகிறோம். செய்ய மறந்த, செய்ய மறுத்த கடமைகளில் மிகவும் முக்கியமான கடமை... நம் அயலாவர்மீது அன்பு, பரிவு, கருணை காட்டுவது...

இவ்வுலகில் நாம் எவ்வளவுதான் திறமையாக, வெற்றிகரமாக, பல கடமைகளை ஆற்றினாலும், பிறரன்பு என்ற ஒரு கடமையில் நாம் தவறியிருந்தால், ஏனைய வெற்றிகள் அனைத்துமே வீணாகிவிடும். திருத்தூதரான, புனித பவுல் அடியார் இதனை அழகாகக் கூறியுள்ளார். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 13ம் பிரிவில் அவர் அன்பைப்பற்றி கூறும் கருத்துக்கள் "அன்பின் காவியம்" என்று புகழ் பெற்றுள்ளன. இந்தக் காவியத்தின் துவக்க வரிகள் இவ்வாறு ஒலிக்கின்றன:
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13: 1-3
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
விண்ணவர் மொழியில் பேசுதல், மலைகளைப் பெயர்க்கும் அளவு நம்பிக்கை கொண்டிருத்தல், தன்னையே தகனமாகக் கையளித்தல் என்ற உயர்ந்த பல நற்செயல்களைச் சாதித்தாலும், அன்பு இல்லையெனில் இவை அனைத்தும் வீண் என்று பவுல் அடியார் கூறுவது, மனித வாழ்வில் அன்புக்கு நாம் தரவேண்டிய முக்கியமான இடத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

அன்பு இவ்வுலகில் மட்டும் அல்ல, மறு உலகிலும் முதலிடம் பெறுகிறது. விண்ணகத்தில் நுழைவதற்கு, இறைவனைத் தொழுதல், புனித தலங்களுக்குச் செல்லுதல், கோவிலுக்குக் காணிக்கை செலுத்துதல், பக்தி முயற்சிகள் மேற்கொள்ளுதல் போன்ற புனிதமான செயல்கள் பயனளிக்கும் என்று சிந்திப்பவர்களுக்கு, அதிர்ச்சி ஒன்று காத்திருக்கும். பிறரன்பு, அதுவும், எளியவர் மீது காட்டப்படும் அன்பு ஒன்றே நம்மை மறு உலகில் அனுமதிக்கும் ஒரே நிபந்தனை என்பதை இயேசு மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில், 31 முதல் 46 முடிய உள்ள இறைச்சொற்றோடர்களில் விரிவாகக் கூறியுள்ளார். மக்களினத்தார் அனைவருக்கும் மானிட மகன் தீர்ப்பு வழங்க வரும்போது, அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு அளவுகோல்... "மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்ற ஒரே ஒரு கேள்வி.

உணவின்றி, உடையின்றி தவிப்போருக்கும், அன்னியராக, நோயுற்றவராக, சிறையில் அடைக்கப்பட்டவராக வாழ்வோருக்கும் நாம் என்ன செய்துள்ளோம் என்ற அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே நாம் மறுவாழ்வில் அனுமதி பெறுவோமா, மாட்டோமா என்பது தீர்மானம் செய்யப்படும். நாம் ஆற்றும் இக்கடமைகள், சிறியோருக்கு ஆற்றப்படும் கடமைகள் என்ற அளவில் நின்றுவிடுவதில்லை; அவை இறைவனுக்கே செய்யப்படும் கடமைகளாக மாறுகின்றன என்றும் இயேசு அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். சிறியோருக்குத் தங்கள் கடமைகளைச் செய்தவர்களுக்கு மானிட மகன் தரும் விண்ணக வரவேற்பு இவ்விதம் ஒலிக்கும்:
மத்தேயு நற்செய்தி 25: 34, 40
என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.... மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்
அதேபோல், இக்கடமைகளைச் செய்யத் தவறியவர்களை நோக்கி,
மத்தேயு நற்செய்தி 25: 41, 45
சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்என்ற தீர்ப்பை வழங்குவார் இறைவன். இந்த அணையா நெருப்புக்குள் புதைக்கப்பட்டவர்தான் செல்வர். எனவே, எவ்விதத் தயக்கமும் வேண்டாம். மறுவாழ்வில் நாம் அடியெடுத்து வைக்க எளியோரின் தயவும், பரிந்துரையும் தேவை.
"ஏழையிடமிருந்து சிபாரிசு கடிதம் இல்லாமல், யாரும் விண்ணகம் செல்ல முடியாது" என்று புகழ்பெற்ற கிறிஸ்தவ மறைபோதகர் James Forbes என்பவர் கூறியுள்ளார். இத்தகையச் சிபாரிசு கடிதத்துடன் நாம் விண்ணகத்தில் நுழையும்போது, அங்கு நம்மை வரவேற்பதற்கும் ஏழைகள் காத்திருப்பார்கள்.

செல்வருக்கும் இலாசருக்கும் மறு உலகில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்க இயேசு பயன்படுத்தும் வார்த்தைகள், நம்மை இன்னும் ஆழமான சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. "அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்" என்பது இலாசர் அடைந்த மாற்றங்கள். இவ்வுலகில் இலாசர் "செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்" என்று விவரிக்கப்பட்டார். மறு உலகில் அவர் "ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.
வீதியில் கிடந்தார்; ஆபிரகாம் மடியிலும் கிடத்தப்பட்டார்.... இந்தக் கோணத்தில் பார்த்தால், இலாசர், இரு உலகங்களிலும் கிடந்தார் அல்லது கிடத்தப்பட்டார். இலாசரைப் பொருத்தவரை, அவரது சூழல்கள் மாறின... அதாவது, 'செல்வருடைய வீட்டு வாயில்' என்ற சூழலிலிருந்து, 'ஆபிரகாமின் மடி' என்ற சூழலுக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், இவ்விரு நிலைகளிலும் அவர் மாறவில்லை. அவர் மாறத் தேவையில்லை என்று இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. சூழ்நிலைகள் மாறினாலும், மாறாமல் வாழும் பக்குவம் எல்லாரும் பெறுவதில்லை.
செல்வரின் கதையோ வேறு... சூழலுக்குத் தக்கதுபோல் செல்வர்கள் மாறுவது நாம் அனைவரும் உணர்ந்த ஓர் உண்மை. வேறு பல சூழல்கள் மாறினாலும், சேர்த்து வைத்துள்ள செல்வம் என்ற சூழல் மாறக்கூடாது என்பதற்காக செல்வர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், பல வேளைகளில் அவர்களை மேலும் மேலும் தீய வழிகளில் அழைத்துச் செல்கின்றன. தன்னுடைய செல்வச்சூழல் மாறாது, அது நிரந்தரமானது என்ற கனவுலகில் வாழ்ந்த செல்வருக்கு உண்டான மாற்றத்தை ஒரு எச்சரிக்கையாக இயேசு தருகிறார்.
"நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்" என்பது செல்வரின் இவ்வுலக வாழ்வை விவரிக்கும் வார்த்தைகள். "பாதாளத்தில் வதைக்கப்பட்டார்" என்பது மறு உலகில் செல்வர் அடைந்த மாற்றத்தை விவரிக்கும் கொடுமையான வார்த்தைகள்.
செல்வரின் வெளிச் சூழலான செல்வம் பறிக்கப்பட்டு, அவர் தீப்பிழம்பில் வெந்தபோது, அவர் அறிவொளி பெறுகிறார். அவரது வாழ்வு தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டபோது, அவருக்குள் ஒரு மன மாற்றம் உருவானது...

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது நம் சிந்தனைக்குரியது.
ஆபிரகாமின் மடியில் இருந்தவர் யார் என்பதும் அவர் பெயர் என்ன என்பதும் அச்செல்வருக்குத் தெரிந்திருந்தது. அவ்வாறெனில், இவ்வுலகிலும் அவர் இலாசரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும். அப்படி தெரிந்திருந்தும், அவர் தனக்கும் இலாசருக்கும் இடையே செயற்கையாக ஒரு பெரும் பிளவை உருவாக்கியிருந்தார். அவர் மனமறிந்து உருவாக்கிய அந்தப் பிளவு மறு உலகில் நிரந்தரமாக அமைக்கப்பட்டது என்பதை ஆபிரகாம் அவருக்கு நினைவுறுத்துகிறார்:
லூக்கா 16: 26
ஆபிரகாம் செல்வரிடம், 'மகனே, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.
மறுவாழ்வில் இலாசரை அடையாளம் கண்டு, அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட செல்வர், இந்த மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பகுதியை இவ்வுலக வாழ்வில் அளித்திருந்தால், ஒருவேளை அவரும் ஆபிரகாமின் மடியில் சேர்ந்திருக்கக் கூடும்.

செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல் செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?

அடுத்த சில வாரங்கள் நமது விவிலியத் தேடலில் உலகப் புகழ்பெற்ற உவமைகள் மூன்று இடம்பெற உள்ளன. காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் என்ற இந்த உலகப் புகழ்பெற்ற உவமைகளில் நம்மை வழிநடத்த. உரோம் நகரில் விவிலிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர் இயேசு கருணா அவர்கள் இசைந்துள்ளார். அவருக்கு வத்திக்கான் வானொலிக் குடும்பத்தினரின் சார்பில், நன்றிகள்.








All the contents on this site are copyrighted ©.