2013-10-29 16:17:58

வாரம் ஓர் அலசல் – நெஞ்சில் நேர்மை


அக்.28,2013. உலகம், கொள்ளையடிப்பவர்க்கு நிழலாச்சு! மோசச் செயலாலே முன்னேற்றம் கண்டோரின் ஆசைக்கு நீதி இரையாகுதடா, பழந்துணி அணிந்தாலும் பசியாலே இறந்தாலும் பாதை தவறாத பண்பு உள்ளம் இருந்தநிலை மறந்து இழுக்கான குற்றம்தன்னைப் புரிந்திட லாமென்று துணியுதடா, நேர்மை பொல்லாத சூழ்நிலையால் வளையுதடா என்று, பாவேந்தர் பாரதிதாசன் நேர்மையற்ற சமூகத்தை நினைத்துப் பாடினார். ஆயினும், நேர்மையான மனிதர்கள் நம் சமுதாயத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை, ”ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நேர்மை: ஓய்வூதியம் பெறுவதற்காக உழைக்கிறார்” என்று தடித்த எழுத்துக்களில் இந்த அக்டோபர் 11ம் தேதியன்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி ஒன்று உறுதி செய்கிறது.
திருச்சி, மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் 65 வயதாகும் கோபாலன் அவர்கள், 1972ம் ஆண்டில் தமிழக மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வுபெற்று, 1982ம் ஆண்டில் உதவி வணிக ஆய்வாளராக, திருச்சி, மன்னார்புரம், மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் வணிக ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற இவர், 2006ம் ஆண்டு சனவரி 31ம் தேதியன்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற அடுத்த நாளே, வழக்கம் போல் அலுவலகம் வந்த அவரைப் பார்த்து, ஓய்வு பெற்றதை மறந்து, வேலைக்கு வந்து விட்டாரோ என, அலுவலக ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் கோபாலனோ, "சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, அரசு ஓய்வூதியம் தரப்போகிறது. அந்த ஓய்வூதியத்துக்காக இனிமேல் வேலை பார்க்கப்போகிறேன்' எனக் கூறி அனைவரையும் அதிர வைத்தார். வாயடைத்து போன அதிகாரிகள், அவரது நேர்மையைக் கண்டு, அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக பணியாற்றும் கோபாலனின் பணி, அந்தப் பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக உடன் பணிபுரிவோர் கூறுகின்றனர்.
”வீடற்ற மனிதர் ஒருவர் காணாமல்போன வைர மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்தார்” என்று, The Times of India தினத்தாள், வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்வை கடந்த பிப்ரவரி 25ம் தேதி பிரசுரத்தில் வெளியிட்டிருந்தது. உணவு விடுதி ஒன்றில் சாப்பிட வந்த ஒருவரின் வைர மோதிரம் கட்டணத்தைச் செலுத்தும் தட்டில் கைநழுவி விழுந்துவிட்டது. அந்த நபர் சென்ற பின்னர் அதைப் பார்த்த அந்த விடுதிப் பணியாளர் ஒருவர் அந்த நபரைத் தேடிக் கண்டுபிடித்து அதைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த பணியாளருக்குக் குடியிருக்க வீடு கிடையாது. இதேபோல், தமிழகம் உட்பட பல இடங்களில், பயணிகள் மறந்துபோய் வாடகை வாகனங்களில் விட்டுச்சென்ற பெருந்தொகையையும், பொருள்களையும் காவல் நிலையங்களில் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுனர்கள் குறித்து அவ்வப்போது செய்திகளில் வாசிக்கிறோம். அதேநேரம், வேலைவாங்கித் தருவதாக மோசடி, பெண்ணின் கழுத்தை அறுத்து நகை பறிப்பு, பீரோவை உடைத்து கொள்ளை முயற்சி.... இவை போன்ற செய்திகளையும் அடிக்கடி நாம் வாசிக்கிறோம். எந்த ஒரு மனிதரும் தனக்குச் சொந்தமில்லாத எதையும் அடைவதற்கு ஆசைப்படுவது அற்பத்தனமானது.
இவ்வுலக வாழ்வுக்குரியவற்றில் பற்றின்றி இருக்கும் இதயமே, உண்மையில் நேர்மையான இதயமாகும். பிறரின் பொருளை அபகரிக்காதே என்ற கடவுளின் பத்தாவது கட்டளைக்கு எதிராக இருப்பவர்களே நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள். போலித்தனமான ஆசைகளில் பற்று வைப்பவர்களே இரண்டுமுக வாழ்வை வாழ்வார்கள். அதாவது பேசுவது ஒன்றாக இருக்கும். செய்வது வேறொன்றாக இருக்கும். மேடைகளில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவார்கள். ஆனால் அவர்கள் வீடுகளில் ஆன்மீகம் கேள்விக்குறியாய் இருக்கும். நம்பகமான பொருள்கள் என்று அறைகூவி விற்பார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் நம்ப முடியாதவர்களாக, இருப்பார்கள். திரைப்படங்களில் எவ்வளவோ நல்ல காரியங்களை வலியுறுத்தி நடிக்கும் நாயகர்கள் எல்லாருமா தாங்கள் திரையில் சொன்னதுபோல் தங்களது சொந்த வாழ்க்கையில் வாழ்கிறார்கள்! இத்தகைய வாழ்வுமுறை இரண்டுமுக வாழ்க்கை, நேர்மையில்லாத வாழ்க்கை.
அக்காலத்தில் சீனாவில் ஓர் அரசருக்கு குழந்தைகள் இல்லை. ஒருநாள் தனது நாட்டு மக்களிடம், மிகவும் அழகான மலர் ஒன்றை செடியில் மலரச்செய்து கொண்டுவருபவர்கள் தனது வாரிசுகளாக இருப்பார்கள் என்று அறிவித்தார். அந்த நாட்டிலுள்ள இளையோர்க்கு விதைகளையும் கொடுத்தார் அரசர். Dink என்ற இளைஞன் அரசர் கொடுத்த அந்த விதையை மிகுந்த ஆர்வமுடன் ஊன்றினார். அதற்குத் தேவையான உரமிட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாகப் பராமரித்து வந்தார். அதன் வளர்ச்சியில் மிகுந்த கவனமும் செலுத்தினார் Dink. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் அவ்விதை அப்படியே இருந்தது. அதேநேரம் அவரது நண்பர்களின் விதைகள் அழகிய செடிகளாக வளர்ந்து வந்தன. நாள் செல்லச் செல்ல இளைஞன் Dinkக்கு கவலை அதிகமாகியது. அந்த பூந்தொட்டியிலிருந்த மண்ணை மாற்றினார் Dink. செடி வளருகிறதா என்று ஆசையோடு தினமும் பார்த்தார். ஓராண்டு கடந்தும் விதை முளைக்கவே இல்லை. அரண்மனைக்கு அனைத்து இளையோரும் தங்களின் பூந்தொட்டிகளை எடுத்துச்செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது. அரசர் அனைவருடைய பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கியிருந்த அழகிய மலர்களைப் பார்த்துக்கொண்டே வந்தார். அவர், Dinkஐப் பார்த்தவுடன், “நீ ஏன் காலியான தொட்டியைக் கொண்டுவந்திருக்கிறாய்?” என்று வினவினார். Dink மிகுந்த வெட்கமடைந்தார். ஆயினும், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அரசரிடம், அந்தச் செடியை வளர்க்க எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனில்லாமல் போனது என்று, தான் செய்த அனைத்தையும் விவரித்தார். அரண்மனையில் ஒரே நிசப்தம் நிலவியது. அரசர் தன்னை தண்டிக்கப் போகிறார் என்று பயந்து நடுங்கினார் Dink. ஆனால் அனைவரும் வியக்கும்வகையில் அரசர் புன்முறுவலுடன் Dinkஐ தட்டிக் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த இளையோரிடம், “நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதைகள் வேகவைத்தவை. அவற்றை வளர்ப்பது மிகவும் கடினம். இந்த இளைஞன் Dink மட்டுமே நேர்மையாளனாய் இருக்கிறான். இவன் ஒருவனே எனது வாரிசாகத் தகுதியுள்ளவன்” என்று சொன்னார். Dink தவிர அங்கிருந்த அனைத்து இளையோரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர். Dink மட்டும் தலையை நிமிர்த்தி கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார்.
இதுதான் நேர்மை. அன்பு நேயர்களே, நாமும் பல நேரங்களில் நாம் செய்யும் செயல்களின் முடிவைப் பற்றிக் கவலைப்படுகிறோம். நாம் எடுக்கும் பாதை பற்றிப் பறைசாற்றுகிறோம். ஆனால் மனசாட்சியை விற்றுவிடுகிறோம். மனசாட்சி, சரி என்று உணர்த்தினால்கூட அதற்கு நியாயம் சொல்லிக்கொண்டு, வெற்றிக்கு வசதியான பாதையைத் தேர்ந்து கொள்கிறோம். இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம், ஒரு பற்பசை வாங்கினால் அதில் 30 விழுக்காடுஅளவு இலவசம் போன்ற நுகர்வுக் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
மனிதரின் பேராசையே பல நேரங்களில் நேர்மை தவறி வாழத் தூண்டுகிறது. பொருளுக்குமேல் பொருள் சேர்க்கும் ஒரு பேராசைக்காரன் ஒருசமயம் தனது நண்பர் வீட்டுக்குச் சென்று, தான் முப்பது பொற்காசுகளைத் தொலைத்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனது நண்பர் நாணயமானவர், கருணைமிக்கவர். அந்த நேரத்தில் வீட்டில் நுழைந்த நண்பரின் மகள் வழியில் முப்பது பொற்காசுகளைக் கண்டெடுத்ததாகக் கூறினாள். உடனே அவர், இந்தக் காசுகள் இவருக்கு உரியவை. அவர்தான் முப்பது பொற்காசுகளைத் தொலைத்துவிட்டார் என்று சொல்லி அவரிடம் அவற்றைக் கொடுக்கச் சொன்னார். அந்தப் பேராசைக்காரன் அக்காசுகளை எண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு தீய எண்ணம் உதயமானது. தான் நாற்பது பொற்காசுகளைத் தொலைத்ததாகவும், இவரும் இவரது மகளும் சேர்ந்து பத்துப் பொற்காசுகளை எடுத்துக் கொண்டனர் என்றும் புகார் சொன்னான். அந்த நாணயமானவர் எவ்வளவோ மறுத்தும் அந்தப் பேராசைக்காரன் கேட்கவில்லை. நீதிமன்றத்தில் புகார் செய்தான் அவன். வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த நாணயமானவரையும் அவரது மகளையும் அழைத்து விசாரித்தார். முப்பது பொற்காசுகளையே தான் வழியில் கண்டெடுத்ததாகவும், அதையே தனது தந்தை அவரிடம் அளித்ததாகவும் கூறினாள் அச்சிறுமி. சிறிது யோசித்த வழக்கறிஞர், அந்தப் பேராசைக்காரனிடம், அப்படியானால் இந்த முப்பது பொற்காசுகள் உன்னுடையவை அல்ல, நீ தொலைத்த நாற்பது பொற்காசுகள் கிடைக்கின்றபோது நீ அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்ப்புச் சொன்னார். ஆம். பேராசைக்காரர்கள் நேர்மையாக வாழ்வது கடினம்.
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது தலைமை அமைச்சர் சாணக்கியர் ஓர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர். ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சாணக்கியர் எழுந்து, “மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்றார். அரசரும், அமைச்சரின் கருத்தை வரவேற்று, எல்லா ஏழை எளிய மக்களுக்கும் வழங்கவேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி, அவற்றை வழங்கும் பொறுப்பையும் சாணக்கியரிடமே ஒப்படைத்தார். கம்பளிப் போர்வை பற்றிய விடயம் அறிந்த அந்த ஊர் கொள்ளையர்கள், கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டனர். குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். அங்கு கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருட வந்ததையும் மறந்து, தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை அவர்கள் எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன், “ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே… இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?” என்றான். அதற்கு சாணக்கியர், “அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசின் பொருள்கள். அவற்றை எப்படி எனக்கெனப் பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் மன்னர் என்மீது வைத்துள்ள நம்பிக்கை என்னாவது?” என்றார். திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். “எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருட எண்ணவே மாட்டோம்” என்று சத்தியம் செய்தார்கள்.
பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாணக்கியரின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பர்களே, இத்தகைய நேர்மையாளர்கள் வாழ்ந்த மண்ணில் வாழும் நாமும், நேர்மையை நம் வாழ்வின் மிக உயரிய பண்பாக பின்பற்றுவோம். நம் வாழ்க்கையில் சிறு சிறு செயல்களிலும் பேராசையை தவிர்த்து நடப்போம். கடைக்குச் செல்கின்றோம். தவறுதலாக மீதிக் காசு அதிகம் கிடைத்தால், அதை உடனே திருப்பிக் கொடுப்பது, வாகனச் சீட்டுடன் பயணம் செய்வது, கள்ளத் தராசுகளைத் தவிர்ப்பது போன்ற நேர்மையான செயல்களை வாழ்வாக்குவோம். எசாயா இறைவாக்கினர் சொல்கிறார் : “தீமை செய்வதை விட்டொழியுங்கள். நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்”(எச.1,16-17) என்று. புத்தரின் போதனையும் இதுவே. “தீமை செய்வதை விட்டொழியுங்கள். நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். இதயத்தைத் தூய்மையாக வைத்திருங்கள்”.








All the contents on this site are copyrighted ©.