2013-10-29 16:04:50

தமிழகத்தில், குழந்தைகள் இறப்பு அளவீடு குறைகிறது : ஆரம்ப நலவாழ்வு நிலையங்கள் சாதனை


அக்.,29,2013. தமிழகத்தில், குழந்தைகள் இறப்பு அளவீடு, கடந்த 10 ஆண்டுகளில், 51 விழுக்காடு குறைந்துள்ளதாக, மத்திய அரசு அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் செயல்திறன் மேம்பாடு மற்றும் தொடர் கண்காணிப்புகளும், மருத்துவ வசதி அதிகரிப்பும், இதற்கு முக்கிய காரணம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநில அளவிலான குழந்தைகள் இறப்பு அளவீடு குறித்து, மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் கீழ் செயல்படும், மாதிரி பதிவு திட்ட அமைப்பு ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, இந்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு அளவீடு, கடந்த, 10 ஆண்டுகளில், 51 விழுக்காடு குறைந்துள்ளது.
கடந்த, 2002ல், குழந்தை இறப்பு எண்ணிக்கை, ஆயிரத்துக்கு, 43 ஆக இருந்தது. 2008ல், 35எனவும்; 2009ல், 28; 2010ல், 24; 2011ல், 22; 2012ல், 21 எனவும் படிப்படியாகக் குறைந்துள்ளது.
பத்து ஆண்டுகளில், ஆயிரத்துக்கு 43 என்ற அளவில் இருந்து, 21 என்ற அளவுக்கு குறைந்துள்ளதன் மூலம், குழந்தைகள் இறப்பு அளவீடு, 51 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
ஐ.நா., பொது நலவாழ்வு அமைப்பின் வழிகாட்டுதல், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், மாநில அரசு ஒதுக்கும் நிதி உதவியுடன், பெண்கள் கல்வியறிவு அதிகரிப்பு ஆகிய அனைத்துக்கூறுகளும் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
நாட்டின், 19 பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளாவில் குழந்தை இறப்பு அளவீடு ஆயிரத்துக்கு, 12 என்ற அளவில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. பிற மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு அளவீடு அதிகமாக உள்ளது.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.