2013-10-28 15:45:47

மதங்களிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தீபாவளி வாழ்த்துச் செய்தி


அக்.,28,2013. வரும் ஞாயிறன்று இந்தியாவில் சிறப்பிக்கப்படும் தீபாவளி திருவிழாவுக்கென வாழ்த்துக்களுடன் சிறப்புச்செய்தியொன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் மதங்களிடையே உரையாடல் பணியை மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.
'அனைத்து வாழ்வு மற்றும் ஒளியின் ஆதாரமாக இருக்கும் இறைவன், உங்கள் வாழ்வை ஒளிர்வித்து உங்கள் மகிழ்வையும் வாழ்வையும் ஆழப்படுத்துவாராக' என்ற வாழ்த்தோடு தன் சிறப்புச்செய்தியை வெளியிட்டுள்ள திருப்பீட அவை, உலகாயுதப்போக்குகளால் மனிதகுல உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், நட்புணர்வு மற்றும் ஒருமைப்பாட்டின் மூலம் மனிதகுலத்தின் பொதுநலனுக்காக கிறிஸ்தவர்களும் இந்துக்களும் எவ்வாறு ஒன்றிணைந்து உழைக்கமுடியும் என்பது குறித்து சிந்திப்போம் எனவும் அச்செய்தியில் கூறியுள்ளது.
மனிதர்களுக்கிடையே உருவாகும் உறவைச்சார்ந்தே உலகில் அமைதியைக் கட்டியெழுப்புதல், உண்மையான ஒருமைப்பாட்டையும் இணக்கவாழ்வையும் கொணர்தல் போன்றவை உள்ளன எனவும் தன் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளது மதங்களிடையே உரையாடல் பணியை மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன உணர்வுகளையும், கலாச்சார, மத மற்றும் கொள்கை வேறுபாடுகளையும் தாண்டியதாக நம் உறவுகள் இருக்கவேண்டும் என கூறும் இச்செய்தி, உலகாயுதப்போக்குகளின் அதிகரிப்பால், ஆழமான ஆன்மீக மற்றும் மத மதிப்பீடுகளின் முக்கியத்துவம் இழக்கப்பட்டுவருவது குறித்த கவலையையும் தெரிவிக்கிறது.
நல்லுறவுகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை போற்றி ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும், முழு மனிதகுல நன்மைக்கென மதங்களிடையே நல்லுறவுகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது, மதங்களிடையே உரையாடல் பணியை மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.