2013-10-28 15:41:18

திருமணம் என்ற அருள் சாதனம் ஓர் ஆடம்பர அடையாளம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.28,2013. 'குடும்பமே, நம்பிக்கையின் மகிழ்வை வாழ்வாயாக' என்ற கருத்தில் அனைத்துலகக் குடும்ப விழாவைக் கொண்டாடிய அனைவரிடமும், இன்றைய உலகில் நம்பிக்கையின் மகிழ்வை வாழ முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை மாலை தன் உரையைத் துவக்கினார்.
அக்டோபர் 26, 27, இச்சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், வத்திக்கானில் திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையினரால் ஏற்பாடு செய்யபட்டிருந்த குடும்ப விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்வாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்குக் கூடியிருந்த மக்களுக்கு, குடும்பங்களில் நிலவ வேண்டிய மகிழ்வு குறித்து திருத்தந்தை உரை வழங்கினார்.
மகிழ்வின் முக்கியத் தடையாக இருப்பது, அன்பற்றச் சூழல் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, குடும்பங்களில் அன்பு குறையும்போது, வேதனையின் முழு பாரத்தையும் நாம் உணர்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருமண அருள் சாதனத்தில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வோம் என்று மேற்கொள்ளும் உறுதிமொழியை நினைவுருத்தியத் திருத்தந்தை, ஆணும், பெண்ணும் மேற்கொள்ளும் இந்த நம்பிக்கை உறவே குடும்பங்களின் அடித்தளம் என்று கூறினார்.
திருமணம் என்ற அருள் சாதனம் ஓர் ஆடம்பர அடையாளம் அல்ல, மாறாக, அதுவே நம் குடும்ப வாழ்வுக்கு உறுதியையும், துணிவையும் வழங்கும் அருள் கொடை என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
குழந்தை இயேசு கோவிலில் காணிக்கையாக்கப்படும் காட்சி, இக்குடும்ப விழாவுக்கு முக்கிய அடையாளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அடையாளக் காட்சியில் இடம்பெறும் சிமியோன், அன்னா ஆகிய முதியோரைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி, குடும்பங்களில் முதியோரின் சொற்களுக்குச் செவிகொடுக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.
குடும்பங்களில் பயன்படுத்தவேண்டிய மூன்று முக்கியமான சொற்கள், 'தயவுசெய்து', 'நன்றி' மற்றும் 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்பவையே என்று கூறியத் திருத்தந்தை, இந்த மூன்று சொற்களைப் பழக்கப்படுத்தும் குடும்பங்களில், கோபம், வன்முறை ஆகியவை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, ஒப்புரவும், அமைதியும் நிலவும் வாய்ப்புக்கள் அதிகம் என்ற உறுதியை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.