2013-10-25 15:56:12

வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள புனித பேதுரு கிரிக்கெட் அணி


அக்.25,2013. கலாச்சாரத்தின் நல்ல விழுமியங்களுக்கு இளையோரை அழைத்துச் செல்லும் ஒரு கருவியாக விளையாட்டுப் போட்டிகள் அமைவதையே திருஅவை விரும்புகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீடத்தின் கலாச்சாரப் பணிக்குழு, அக்டோபர் 20, கடந்த ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை நடத்தியது. அக்டோபர் 22, கடந்த செவ்வாயன்று, புனித பேதுரு கிரிக்கெட் அணியை உருவாக்குவதாக அறிவித்தது.
இந்நிகழ்வுகளையொட்டி, திருப்பீடத்தின் கலாச்சாரப் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi அவர்கள், தன் வலைத்தளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோது, இவ்வாறு கூறினார்.
இத்திருப்பீட அவையின் உறுப்பினராகப் பணியாற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் Theodore Mascarenas அவர்கள், புனித பேதுரு கிரிக்கெட் அணியின் மேலாளராகவும், இலங்கையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெயராஜா அவர்கள் அணித்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருள்பணியாளர் Mascarenas அவர்கள் CNA செய்திக்கு அளித்த பேட்டியில், வத்திக்கானில் உருவாகியுள்ள கிரிக்கெட் அணி, கலாச்சாரங்களுக்கு இடையிலும், மதங்களுக்கிடையிலும் ஓர் உரையாடலை வளர்க்கும் சிறந்த கருவி என்று கூறினார்.
உலகின் 105 நாடுகளில், குறிப்பாக, பல்வேறு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் இந்த விளையாட்டை, வெறும் வியாபாரம் என்ற தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுதலை செய்து, இளையோரை இணைக்கும் ஒரு கருவி என்பதைக் காட்டவே திருஅவை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று அருள் பணியாளர் Mascarenas அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.