2013-10-25 15:51:29

திருமண உறவே, மனித சமுதாயத்தின் முதல் அருள் சாதனம் - திருத்தந்தை


அக்.25,2013. மனிதராய்ப் பிறக்கும் ஒவ்வொருவரும் அன்பையும், மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளையும் இயல்பாகக் கற்றுக்கொள்ளும் சிறந்ததொரு பள்ளிக்கூடம் நமது குடும்பங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையின் 21வது ஆண்டு கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தைக் குறித்து மூன்று கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சமுதாய வாழ்வின் அடிப்படையாக விளங்குவது குடும்பம் என்பது திருத்தந்தை வழங்கிய முதல் கருத்தாகவும், குடும்ப வாழ்வு, திருமண உறவின் அடிப்படையில் எழுவது, குடும்பத்தில் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என்ற நிலைகள் ஆகியவை திருத்தந்தை வழங்கிய இரண்டாவது, மூன்றாவது கருத்துக்களாக அமைந்தன.
குடும்பங்களில் ஒவ்வொருவரின் தனித்துவமும் வளர்வதற்கு இடம் தரப்படவேண்டும் என்பது உண்மையானாலும், அதே வேளையில், அனைவரும் இணைந்து உருவாக்கும் ஒரு கூட்டுறவு முயற்சியே குடும்பம் என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
திருமண உறவே, மனித சமுதாயத்தின் முதல் அருள் சாதனம். இங்கிருந்து உருவாவதே பிற வளர்ச்சிகள் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
குழந்தைகளையும், வயது முதிர்ந்தோரையும் திக்கற்றவர்களாக விட்டுவிடும் சமுதாயம், தன் வேர்களை அறுத்து விடுவதோடு, தன் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றிவிடுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
திருப்பீடத்தின் குடும்பப்பணி அவை, அண்மையில் வடிவமைத்துள்ள இலச்சினை பற்றிய தன் கருத்துக்களைக் கூறியத் திருத்தந்தை, குழந்தை இயேசு, கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படும் காட்சியை இந்தப் புதுவடிவ இலச்சினை நினைவுறுத்துகிறது என்பதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.