2013-10-25 15:49:38

திருத்தந்தை : பாவங்களை ஒளித்து வைக்காமல் அறிக்கையிடுவதற்கான மனபலத்தைக் கொண்டிருப்போம்


அக்.25,2013. நாம் ஒவ்வொருவரும் நமது பாவங்களை ஒளித்து வைக்காமல் அறிக்கையிடுவதற்கான மனபலத்தைக் கொண்டிருப்போம் என இவ்வெள்ளிக்கிழமை காலை புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், ஒப்புரவு திருவருட்சாதனத்தை மையமாக வைத்து மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பாவத்தை அறிக்கையிடும் ஒப்புரவு அருட்சாதனத்தில் கிறிஸ்துவின் அனபை எதிர்கொள்ளச் செல்லும் நாம், உள்ளத்தில் நேர்மையுடனும், குழந்தைகளுக்குரிய திறந்த மனநிலையுடனும் செல்லவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.
ஒர் அருள் பணியாளரிடம் சென்று பாவங்களை அறிக்கையிடவேண்டியிருப்பதாலேயே பலர் ஒப்புரவு அருட்சாதனத்தையே மேற்கொள்ளாமல் இருப்பது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், தன் பாவ இயல்புகள் குறித்து வெளிப்படையாக அறிக்கையிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
பாவத்தை எதிர்த்து தான் மேற்கொண்ட போராட்டம் குறித்து புனித பவுல் எடுத்துரைப்பது, நாம் தினசரி எதிர்நோக்கும் போராட்டத்தையும் நினைவுறுத்துகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆனால் நாம் இதனை ஒரு போராட்டமாக ஏற்றுக்கொள்ளாமல், நியாயப்படுத்தவே முயல்கிறோம் என்றார்.
நம் பாவங்களை நாம் ஏற்றுக்கொள்ளாவிடில், நமக்கு இறைவனின் மன்னிப்பு தேவைப்படாத ஒன்றாகத்தெரியும் என்பது மட்டுமல்ல, நாம் இறைவனின் மன்னிப்பை பெறமுடியாது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள் பணியாளரிடம் பாவங்களை அறிக்கையிடுவது, தாழ்ச்சி எனும் நற்குணத்தோடு ஆற்றப்படவேண்டியது எனவும் கூறினார் திருத்தந்தை. நம் பாவங்களை நாம் அறிக்கையிட்டபின் நாம் சித்ரவதைக்கூண்டுக்குள் எடுத்துச்செல்லப்படுவதில்லை, மாறாக, நாம் பாவி என்பதை இறைவனிடம் நம் சகோதர குரு வழியாக ஏற்பதே அங்கு இடம்பெறுகிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவ அறிக்கையிடும்போது நாம் ஒவ்வொருவரும் உண்மையின் எளிமையை கைவசம் கொள்ளவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.