2013-10-25 15:52:34

அருள் பணியாளர்களைச் சந்திப்பது ஆயர்களின் முதல் கடமை - திருத்தந்தை


அக்.25,2013. அருள் பணியாளர்கள் சூழ்ந்திருக்க, தன் வழிநடத்தும் பணியை ஆற்றும் ஆயர், என்றென்றும் வாழும் தலைமைக் குருவான இயேசுவுக்குச் சிறந்ததோர் அடையாளமாக விளங்குகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருப்பீடத்தின் இரு பொறுப்புக்களுக்கு, புதிதாக நியமனம் பெற்ற இரு அருள் பணியாளர்களை, பேராயர்களாக திருநிலைப்படுத்தும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 24, இவ்வியாழன் மாலையில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றிய வேளையில் தன் மறையுரையில் இவ்விதம் கூறினார்.
ஆயர் திருநிலைத் திருச்சடங்குப் பலியில் பயன்படுத்தப்படும் வழக்கமான மறையுரையில் ஒரு சில மாற்றங்கள் செய்து, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.
உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் அருள் பணியாளர்கள் உங்களைச் சந்திக்க விரும்பினால், சிறிதும் தாமதிக்காமல், அவர்களைச் சந்திப்பது ஆயர்களாகிய உங்களின் முதல் கடமை என்பதை திருத்தந்தை தன் சொந்தக் கருத்தாக இம்மறையுரையில் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின், Strasbourgல் பிறந்த Jean-Marie Speich என்ற அருள் பணியாளர், பேராயராகத் திருநிலை பெற்று, Ghana நாட்டின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றச் செல்கிறார்.
இத்தாலியின் பதுவை நகரில் பிறந்த Giampiero Gloder என்ற அருள் பணியாளர், பேராயராகத் திருநிலைப் பெற்று, பாப்பிறை கல்வி அறக்கட்டளையின் தலைவராக, தன் பணியைத் துவக்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.