2013-10-25 15:50:43

அக்.26,2013 கற்றனைத்தூறும் ... இதயநோயிலிருந்து பாதுகாப்பு தரும் பூண்டு


பூண்டு சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் கரின் ரீட் தலைமையிலான குழுவினர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 140 mm Hg க்கும் அதிக அளவு இரத்த அழுத்தம் உள்ள 50 பேருக்கு நாள்பட்ட பூண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரை 12 வாரங்களுக்கு தரப்பட்டது. பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் அதிகபட்சமாக 10 mm Hg வரை இரத்த அழுத்தம் குறைந்திருந்தது தெரியவந்தது. இரத்த அழுத்தம் அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது நிருபணமாகி உள்ளது. குறிப்பாக குறைந்தபட்சமாக 5 mm அளவுக்கு இரத்த அழுத்தம் குறைவதன் மூலம் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 விழுக்காடுவரை குறையும் என்கிறது ஆய்வு முடிவு. எனினும் பச்சை அல்லது வேக வைத்த பூண்டை நேரடியாகச் சாப்பிடுவதன்மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வேதியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இது இரத்த அணுக்கள் ஒய்வெடுக்க உதவுகிறது. எனவே இரத்தஅழுத்தத்தைக் கட்டுபடுத்த பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உதவும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஆதாரம் : தினகரன்








All the contents on this site are copyrighted ©.