2013-10-24 16:31:25

'சிரியாவில் வாழும் குடும்பங்களுக்கு, உலகில் வாழும் குடும்பங்கள் அனைத்தும்' என்ற கருத்தில், சிரியா நாட்டு மக்களுக்கு நிதி திரட்டும் திட்டம்


அக்.24,2013. 'சிரியாவில் வாழும் குடும்பங்களுக்கு, உலகில் வாழும் குடும்பங்கள் அனைத்தும்' என்ற கருத்தில், துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு நிதி திரட்டும் திட்டத்தை, திருப்பீடம் அறிவித்துள்ளது.
வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள், நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, ‘அகில உலக குடும்பத் திருப்பயணம்’ என்ற நிகழ்வை, திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நாட்களைச் சிறப்பிக்க வத்திக்கான் வரும் திருப்பயணிகள் வழியாகவும், இணையத்தளம், இன்னும் பிற வழிகளிலும் திரட்டப்படும் நிதி, சிரியாவில் துன்புறும் 5,400 குடும்பங்களுக்கு, உதவித் தொகையாக அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
புனித பேதுரு வளாகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் கூடிவரும் திருப்பயணிகள், அகில உலகக் கத்தோலிக்கக் குடும்பத்தின் பிரதிநிதிகள் என்று கூறிய பேராயர் Paglia அவர்கள், இக்குடும்பத்தின் ஓர் அங்கமான சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவது, பொருத்தமான ஓர் அடையாளம் என்று எடுத்துரைத்தார்.
திருப்பீடத்தின் குடும்பநலப் பணி அவை, இத்தாலியக் காரித்தாஸ், மற்றும் சிரியா நாட்டுக் காரித்தாஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து இம்முயற்சியை மேற்கொள்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.