2013-10-24 16:32:48

உயிரைக் காப்பவர்கள் இன்னும் பலர் இவ்வுலகிற்குத் தேவை - மும்பை துணை ஆயர் பெர்னாண்டஸ்


அக்.24,2013. கழுத்து அறுபட்டு, அனாதையாக விடப்பட்டிருந்த குழந்தையின் உயிரைக் காக்க முயற்சிகள் மேற்கொண்டவர்கள், நமக்கு நம்பிக்கையூட்டும் அடையாளங்களாக உள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மும்பை மாநகர் கல்யாண் இரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கருகே, கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, அக்குழந்தையின் உயிரைக் காத்தவர்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை துணை ஆயர், டோமினிக் சாவியோ பெர்னாண்டஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
மும்பை உயர்மறைமாவட்டத்தின் குடும்ப வாழ்வு, மனித உயிர் பாதுகாப்புப் பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றும் ஆயர் பெர்னாண்டஸ் அவர்கள், இக்குழந்தையின் உயிரைக் காத்தவர்கள் போல் இன்னும் பலர் இவ்வுலகிற்குத் தேவை என்று எடுத்துரைத்தார்.
Sion மருத்துவமனையில் பணிபுரிவோர், காப்பாற்றப்பட்ட இக்குழந்தையை, 'புதுமைக் குழந்தை' என்று அழைப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.