2013-10-23 17:03:37

20ம் நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக, 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது, பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்புரவு : பேராயர் சுள்ளிக்காட்


அக்.23,2013. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிடையிலும் ஒப்புரவு பேச்சுவார்த்தைகள் நிகழ்வதை, திருப்பீடம் என்றும் ஆதரித்து வந்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், இச்செவ்வாயன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
மனித வரலாற்றில், இரத்தத்தில் அதிக அளவு தோய்ந்ததென்று கருதப்படும் 20ம் நூற்றாண்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக, 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது, பாலஸ்தீன - இஸ்ரேல் ஒப்புரவு என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ மறையின் தொட்டில் என்று கருதப்படும் மத்தியக் கிழக்குப் பகுதியில் நிரந்தரமான அமைதியை உறுதி செய்வதற்கு, இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளில் அமைதி உறுதி செய்யப்படவேண்டுமென்று பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
சிரியாவில் அமைதி நிலவ அனைத்துலக கிறிஸ்தவர்களையும், செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட செப்டம்பர் முதல் தேதி, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பில், வன்முறை வழியாக ஒருபோதும் இவ்வுலகில் அமைதியைக் கொணரமுடியாது என்று கூறியதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.