2013-10-22 16:09:47

திருத்தந்தை : இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது


அக்.22,2013. நம் மீட்பு குறித்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதற்கு நம் அறிவு, இதயம், முழங்கால், செபம் என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள வெறும் அறிவை மட்டும் பயன்படுத்துவது, எப்போதும் குழப்பத்திலேயே கொண்டுபோய் நிறுத்தும் என இச்செவ்வாய்க் காலை புனித மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் மீட்பளிக்கும் அல்லது குணப்படுத்தும் பணியை, மருத்துமனை தாதியின் பணியோடு ஒப்புமைப்படுத்தி விளக்கினார்.
பாவங்களால் நிறைந்த இதயங்களைக் கொண்டிருந்த மக்களை மீட்க, அன்பையும் அருளையும் பெருமளவில் கொணர்ந்த இறைவன், நமக்கு குணமளித்து வெற்றி கண்டார் என்றார் திருத்தந்தை.
இறைவனின் மறையுண்மைகளைப் புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, மாறாக, இதயம், முழங்கால்படியிடுதல் மற்றும் செபம் தேவை என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாவதாக, இறைவனுடன் நாம் கொள்ளும் நெருக்கமும் அவசியம் என்றார்.
கடவுளில் நம்பிக்கையிழப்பதே மிகப்பெரும் இழிச்செயல் என சில புனிதர்கள் சொல்லிச்சென்றுள்ளதையும் தன் மறையுரையின்போது சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.