2013-10-21 16:02:00

நன்மையால் தீமையை வெல்வதற்கு செபம் உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.21,2013. தீமைக்கு எதிரான போராட்டத்தில் செபம் ஆயுதமாக இருக்கின்றது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் நன்மையால் தீமையை வெல்வதற்குத் தம்மோடு சேர்ந்து போராட அழைக்கும் இறைவனில் கொண்டுள்ள விசுவாசத்தின் வெளிப்பாடே இடைவிடாத செபம் என்று கூறினார்.
நமது தேவை என்னவென்று இறைவன் அறியவில்லை என்பதற்காகவோ அல்லது நமது செபத்தை அவர் கேட்கவில்லை என்பதற்காகவோ நாம் இடைவிடாது தொடர்ந்து செபிக்க வேண்டுமென்று இறைவன் வலியுறுத்தவில்லை, மாறாக, அவர் நமது செபத்தை எப்பொழுதும் அன்புடன் கேட்கிறார், நம்மைப் பற்றி எல்லாம் அறிந்திருக்கிறார், குறிப்பாக, நம் வாழ்வுப் பயணத்தில் உள்ளும் புறமும் நாம் தீமையோடு எதிர்கொள்ளும் போராட்டத்தில் அவர் நம்மோடு இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் இறைவனோடு சேர்ந்து அவரை அருகில் வைத்துக்கொண்டு போராடுகிறோம், அதற்கு அவரது அன்பையும் கருணையையும், அவரது உதவியையும் உணரச்செய்யும் ஆயுதம் செபம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இப்போராட்டம் கடினமானது மற்றும் நீண்டது, இதற்குப் பொறுமையும் விடா உறுதியும் தேவை என்றும் எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசமும் செபமும் இல்லையென்றால், நாம் இருளில் நடப்பவர்களாக இருப்போம், நம் வாழ்வுப் பயணத்தில் நம்மை இழந்துவிடுவோம் என்றும் கூறினார்.
பல பெண்கள் தங்களின் குடும்பங்களுக்காகப் போராடுகிறார்கள், இவர்கள் சோர்வுறாமல் செபிக்கின்றார்கள், இப்பெண்களை இந்று நினைவுகூருவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியபோது கூட்டத்தினர் பலமாக கைதட்டி அதனை வரவேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.