2013-10-21 15:59:07

திருத்தந்தை: பணத்தின் மீதான பேராசை, உறவுகளையும் குடும்பங்களையும் அழித்துவிடும்


அக்.,21,2013. பல நல்ல விடயங்களையும் மனிதகுல முன்னேற்ற நடவடிக்கைகளையும் ஆற்றவல்ல பணத்தின்மீது மனிதனின் பேராசை அதிகரித்தால், அது நம்மை அழிப்பதோடு, குடும்பங்களையும் அழித்துவிடும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில், இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணத்தால் குடும்பங்கள் சிதறுவதும், உறவுகள் பிரிவதும் தினமும் இடம்பெறும் பிரச்னையாக உள்ளது என்றார்.
பணத்தின்மீது பற்றுவைத்து அதனை வழிபடத் துவங்கும்போது, பிறருடன் நாம் கொள்ளும் உறவுகளை அழிவுக்குள்ளாக்குகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணமல்ல, மாறாக பணத்தின்மீது நாம் கொள்ளும் பேராசையே அழிவுக்குக் காரணமாகிறது என்றார்.
எல்லாமிருந்தும் அனைத்தையும் துறந்து நமக்காக எழையாக பிறந்த இறைவன், மனித குல முன்னேற்றத்திற்காகவே நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளார், ஆகவே மற்றவர்களுக்கு உதவவேண்டியது நமது கடமையாகிறது என்றார் திருத்தந்தை.
தன் சகோதரருடன் சொத்துத் தகறாரைத் தீர்த்துவைக்க உதவும் என இயேசுவிடம் ஒருவர் கேட்டது மற்றும் அதற்கு இயேசு அளித்த பதில் ஆகிய கருத்துக்கள் அடங்கிய இன்றைய திருப்பலி வாசகம் குறித்து மறையுரையில் விளக்கமளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர் என்ன வைத்திருக்கிறார் என்பதைச்சார்ந்து அவர் வாழ்வு அமைவதில்லை, ஆகவே பேராசைகளிலிருந்து விலகி கவனமாயிருங்கள் என மேலும் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.