2013-10-19 16:03:58

மறைசாட்சிகள், இருளான வானில் சுடர்விடும் விண்மீன்கள், கர்தினால் அமாத்தோ


அக்.19,2013. மனித சமுதாயத்தில் அன்பு, புரிந்துணர்வு, ஒருவரையொருவர் மதித்தல் ஆகியவற்றின் பாதைகளை ஒளிர்விப்பதற்கு, மறைசாட்சிகள், மனிதர்களின் தீமைகளின் இருளான வானில் சுடர்விடும் விண்மீன்களாகத் திகழ்கிறார்கள் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் இச்சனிக்கிழமையன்று இறையடியார் Stefano Sandor அவர்களை, முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்திய திருப்பலிக்குப் பின்னர் செய்தி வழங்கிய, புனிதர்நிலைக்கு உயர்த்தும் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, மறைசாட்சி Stefano Sandor, ஹங்கேரி நாட்டுக்கு ஒரு கொடையாக இருக்கிறார் என்று கூறினார்.
தங்கள் குருதியைச் சிந்தும் மறைசாட்சி வாழ்வு என்பது கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம், அன்பு மற்றும் பிறரன்பின் மிக உன்னதச் சான்றாக அமைகின்றது என்றும் கூறிய கர்தினால் அமாத்தோ, அர்ப்பண வாழ்வு என்பது, ஒவ்வொரு நாளும் நற்செய்திக்கும், தங்கள் சபையின் தனிவரத்துக்கும் விசுவாசமாய் இருப்பதாகும் என்று இந்த இளம் முத்திப்பேறுபெற்ற Sandor எடுத்துரைக்கிறார் என்று தெரிவித்தார்.
1914ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி ஹங்கேரியின் Szolnokலஸ் பிறந்த Sandor, 1953ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்டார். இவர் சலேசிய சபையைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசியாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.