2013-10-19 15:54:13

திருத்தந்தை பிரான்சிஸ் : கலைகள், திருஅவை விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன


அக்.19,2013. வத்திக்கான் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் எண்ணற்ற கிடைத்தற்கரிய கலைகளையும், பொருள்களையும் பேணிப் பாதுகாத்து வருவதில், அந்த அருங்காட்சிய கலைகளின் காப்பாளர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக, ஆற்றிவரும் சிறப்பான சேவைக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் அருங்காட்சியகத்தில் “கலைகளின் பாதுகாவலர்கள்”(Patrons of the Arts) என்ற அமைப்பினரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைகள், திருஅவை விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன என்று கூறினார்.
விசுவாசத்தின் அழகையும், கடவுளின் படைப்பின் மாபெரும் நற்செய்தியையும், கடவுள் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் மாண்பையும், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிடைத்த மீட்பையும் அறிவிக்கவும் ஒவ்வொரு காலத்திலும் திருஅவை கலைகளைப் பயன்படுத்தி வருகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
எண்ணற்ற திருப்பயணிகள் உரோமைக்கு வந்து இச்செய்தியை கலைகளின் வழியாகப் பெறுவதற்கு இவ்வமைப்பினர் உதவுவதற்குத் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள கலைகளின் பாதுகாவலர்கள் என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக இவ்வமைப்பினர் தற்சமயம் உரோமில் உள்ளனர்.
வத்திக்கான் அருங்காட்சியத்தை தினமும் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் பார்வையிடுகின்றனர்.
வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள கலைகளின் Illinois பாதுகாவலர்கள் என்பது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். வத்திக்கான் அருங்காட்சியத்திலுள்ள கலைகள் பாதுகாக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு அவற்றைப் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக நிதி சேகரித்து வருகிறது. இந்நிறுவனம், 1993ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா மற்றும் ஐரோப்பாவில் அமைந்திருக்கும் 17 அருங்காட்சியக் கலைப் பாதுகாவலர் அமைப்புக்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.