2013-10-19 16:05:19

உலகில் அனைவருக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்படுமாறு கத்தோலிக்கரும் யூதர்களும் அழைப்பு


அக்.19,2013. உலகில் அனைவருக்கும் முழு மத சுதந்திரம், அதன் முழுத்தன்மையோடு வழங்கப்பட வேண்டும் என்று உலகின் அனைத்து அரசுகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமயத் தலைவர்களைக் கேட்டுள்ளது அனைத்துலக கத்தோலிக்க-யூதமத உரையாடல் பணிக்குழு.
கத்தோலிக்கருக்கும் யூதருக்கும் இடையே உரையாடலையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்துலக கத்தோலிக்க-யூதமத உரையாடல் பணிக்குழு, மத்ரித்தில் நடத்திய 22வது கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், உலகில் அதிகரித்துவரும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான அடக்குமுறைகள், பாவம் என்று சொல்லி அவற்றை வன்மையாகக் கண்டித்துள்ளது.
கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கும் யூதமத ராபிகளுக்கும் வழங்கப்படும் பயிற்சியில் யூதமதம் குறித்த வத்திக்கான் ஏடுகள் சேர்க்கப்பட வேண்டுமெனப் பரிந்துரை செய்துள்ள அக்குழு, இவ்விரு மதத்தவர்க்கிடையே புரிந்துகொள்ளுதல் மேலும் வளரவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
திருப்பீட யூதமத உறவு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, அனைத்துலக யூதமத பல்சமய ஆலோசனைக்குழுவின் தலைவர் Betty Ehrenberg ஆகிய இருவர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.