2013-10-17 16:06:21

சுயநலத்தை விடுத்து, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளும்போதுதான் உண்மையான ஆலயங்களை எழுப்பமுடியும் - கர்தினால் Tagle


அக்.17,2013. "என் ஆலயத்தை கட்டுவாய், என் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவாய்" என்று புனித பிரான்சிஸ் அவர்களிடம் இறைவன் உரைத்த சொற்கள் இன்று மீண்டும் நம் உள்ளங்களில் எதிரொலிக்கின்றன என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
அக்டோபர் 16, இப்புதன் முதல் அக்டோபர் 18, இவ்வெள்ளி முடிய பிலிப்பின்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில், புதியவழி நற்செய்திப் பணியை மையப்படுத்தி நடைபெறும் ஆசியக் கருத்தரங்கு ஒன்றில், கர்தினால் Tagle அவர்கள், ஆரம்பத் திருப்பலியாற்றி, மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
இச்செவ்வாயன்று பிலிப்பின்ஸ் நாட்டின் Bohol பகுதியைத் தாக்கிய 7.2 ரிக்டர் அளவு கடுமையான நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பல ஆலயங்களைக் குறிப்பிட்ட கர்தினால் Tagle அவர்கள், ஆலயங்களைக் கட்டியெழுப்புவதையும், திருஅவையைக் கட்டியெழுப்புவதையும் குறித்துப் பேசினார்.
இயேசுவை மூலைக்கல்லாகக் கொண்டு எழுப்பப்படும் உயிருள்ள ஆலயங்களாகிய நாம், சுயநலத்தை விடுத்து, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளும்போதுதான் உண்மையான ஆலயங்களை எழுப்பமுடியும் என்று கர்தினால் Tagle அவர்கள் எடுத்துரைத்தார்.
திருப்பலிக்குப் பின்னர், கர்தினால் Tagle அவர்கள், 'மனதோடு மனது' என்று நடத்தப்பட்ட ஓர் அமர்வில், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு தன் மனதில் எழுந்த பதில்களைப் பகிர்ந்துகொண்டார்.
நடைபெற்றுவரும் இந்த கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒளிவடிவச் செய்தி, இவ்வெள்ளியன்று வத்திக்கானிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.