2013-10-17 16:04:09

சாவியைப் பைக்குள் வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்பது அறிவுசார்ந்த செயல் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.17,2013. பையில் சாவியை வைத்துக்கொண்டு, பூட்டியக் கதவின் முன் நிற்கும் நிலையில் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், லூக்கா நற்செய்தி 11ம் பிரிவில் (லூக்கா 11: 47-54) இயேசு பரிசேயருக்கும், திருச்சட்ட அறிஞருக்கும் விடுத்த கடுமையான எச்சரிக்கைகளை, திருத்தந்தை அவர்கள், தன் மறையுரையின் மையமாக்கினார்.
இறைவனைக் குறித்த தத்துவங்களை ஒரு சாவிக்கு ஒப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இறைவனை கோவிலில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைப் பைக்குள் வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்பது அறிவுசார்ந்த செயல் அல்ல என்று குறிப்பிட்டார்.
இறைவனை, கோவிலுக்குள் பூட்டிவிடுவதால், அக்கோவிலைத் தேடிவரும் மக்கள் உள்ளே நுழைய முடியாமலும், பூட்டப்பட்ட இறைவன் வெளியே வர இயலாமலும் போகிறது என்பதை பரிதாப நிலையாக திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இறைவனை ஒரு தத்துவமாக்கும் கிறிஸ்தவர், அந்தத் தத்துவ எண்ணங்களுக்குச் சீடராகிறாரே தவிர, உண்மையான இறைவனுக்குச் சீடராவதில்லை என்பதை, தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, பைக்குள் சாவியை வைத்துக்கொண்டு, பூட்டிய கதவின் முன் நிற்கும் நிலை இது என்று கூறினார்.
இத்தகைய ஒரு நிலை, அருள் பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை ஆகியோருக்கு உருவானால், அது மிகவும் கவலைக்குரியது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பூட்டப்பட்டக் கதவைத் திறக்கும் உண்மையான சாவி, நம்பிக்கையுடன் நாம் எழுப்பும் செபங்கள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலரும் பார்க்கும் வண்ணம் செபங்களை உரக்கக் கூறிய பரிசேயர்களைப் போல் இராமல், அமைதியில், அறைக்குள் மேற்கொள்ளப்படும் நமது செபங்களே சிறந்ததென்றும் கூறினார்.
மேலும், ‘ஞாயிற்றுக் கிழமைகளில், ஒரு மணிநேரம் மேற்கொள்ளும் முயற்சியாக நமது செபங்கள் மாறக் கூடாது. இறைவனோடு ஒவ்வொரு நாளும் உறவு கொள்வது மிகவும் அவசியம்’ என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.