2013-10-16 15:27:59

கற்றனைத்தூறும் ... அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு நாள்


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17ம் நாள் உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1992ம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆயினும் இந்நாள் 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாளன்று பிரான்சின் பாரிஸ் நகரில் முதன் முதலாக கடைப்பிடிக்கப்பட்டது. பாரிசின் Trocadéro மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில், ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் ஒன்றுகூடி பசி, வறுமை, வன்முறை, பயம் ஆகியவற்றுக்குப் பலியானோரை நினைவுகூர்ந்தனர். ஏனெனில் இந்தச் சதுக்கத்தில்தான் 1948ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் அறிக்கை கையெழுத்தானது. மேலும், அனைத்துலக நான்காம் உலக இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய Joseph Wresinski(1917–1988) என்பவரின் முயற்சியால் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்விபெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப்பெறுதல் போன்றவை உள்ளிட்ட, வாழ்க்கைத்தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். “பாகுபாடற்ற உலகை நோக்கி ஒன்றிணைந்து உழைப்போம் : வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் 2013ம் ஆண்டின் உலக வறுமை ஒழிப்பு நாள் இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலகில் 84 கோடிப் பேர் கடும் வறுமையில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். மேலும், இவ்வாண்டு சனவரி 7ம் தேதியின் நிலவரப்படி, உலகில் 300 கோடிக்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 2.5 அமெரிக்க டாலர் வருமானத்தில் வாழ்கின்றனர். வறுமையை ஒழிக்க முக்கிய சாதனம் கல்வி என்பது பரவலான கருத்து.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.