2013-10-16 15:51:12

ஏழைகளிடம் திருடுவதே ஊழலாக உருவெடுக்கிறது - தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை


அக்.16,2013. "ஏழைகளிடம் திருடுவதே ஊழலாக உருவெடுக்கிறது" என்ற கருத்துடன் தென் ஆப்ரிக்காவில் நிலவும் ஊழலைக் கண்டனம் செய்து தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை ஒரு மேய்ப்புப்பணி சுற்று மடலை வெளியிட்டுள்ளது.
போட்ஸ்வானா, சுவாசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த மடலில், தனிப்பட்டவர்களுக்கு ஊழலாக அளிக்கப்படும் தொகை, ஏழைகளைச் சென்றடைய வேண்டிய பணம் என்று கூறியுள்ளனர்.
வறியோரின் குடியிருப்புக்கள், அவர்களது நல வாழ்வுப் பணிகள் ஆகியவற்றிற்குத் தேவையான பணம் ஊழல் தொகையாக ஒரு சில மனிதர்களை அடைவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், மதப் பணியாளர்கள் என்று பல நிலைகளிலும் உள்ளவர்கள் ஊழலை தங்கள் வாழ்வு முறையாக மாற்றி வருகின்றனர் என்பதைக் குறித்து ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் வழியாக, ஊழல்கள் நிகழும் அலுவலகங்கள், கையூட்டு பெறும் தனி நபர்கள் ஆகியோரை அம்பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக ஆயர்களின் சுற்று மடல் கூறியுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.