2013-10-16 15:58:49

இத்தாலியில் வாழும் வயதான பெண்ணுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்த பண உதவி


அக்.16,2013. இத்தாலியின் வெனிஸ் நகரில் வாழும் ஒரு வயதான பெண்ணுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் பண உதவி செய்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெனிஸ் நகரில் வாழும் 80 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண், நோயுற்று மருத்துவமனையில் இருந்த தன் கணவனைக் காணச் செல்லும் வழியில், பேருந்தில் அவரது 'பர்ஸ்' பறிக்கப்பட்டதையும், அதன் விளைவாக தான் 54 யுரோக்களை இழந்ததையும் ஒரு மடலில் திருத்தந்தைக்கு எழுதியிருந்தார்.
அந்தப் பெண் வாழும் பகுதியில் உள்ள ஒரு பங்குக் கோவிலின் தந்தை Giovanni Antoniazzi அவர்களுக்கு, திருத்தந்தையின் தர்மப் பணிகளை ஏற்று நடத்தும் பேராயர் Konrad Krajewski அவர்கள் மடல் ஒன்றை அனுப்பி, அதில் 200 யூரோக்கள் மதிப்புள்ள காசோலையையும் அனுப்பி, அந்தத் தொகையை அந்தப் பெண்ணுக்குத் தரும்படி சொல்லியிருந்தார்.
திருத்தந்தையின் இந்தப் பரிவைக் கண்ட பங்குத்தந்தையும், அந்தப் பெண்ணும் ஆனந்த அதிர்ச்சியுற்றதாக செய்திகள் கூறுகின்றன.
அண்மையில் லாம்பதூசா தீவுக்கருகே நீரில் மூழ்கி, காப்பாற்றப்பட்ட ஒவ்வொருவருக்கும் திருத்தந்தையின் பெயரால் 300 யூரோக்கள் அனுப்பப்பட்டன என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டையோ அல்லது வேறு உறவுகளையோ தொலைபேசியில் தொடர்பு கொள்ள அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி 'கார்ட்'களையும் திருத்தந்தை அனுப்பியிருந்தார் என்றும் Mail Online என்ற ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.
ஜூன் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட Harley Davidson இருசக்கர வாகனத்தை அவர் ஏலத்தில் விட்டு, அந்தத் தொகையைக் கொண்டு, வீடற்றோருக்கு விடுதி ஒன்றை கட்டும் நிதியைத் துவக்கவிருப்பதாகவும் திருத்தந்தை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Mail Online








All the contents on this site are copyrighted ©.