2013-10-15 15:47:59

விவிலியத்
தேடல் செல்வரும் இலாசரும் உவமை – பகுதி 2


RealAudioMP3 செல்வரும் இலாசரும் என்ற புகழ்பெற்ற உவமையின் முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில் இவ்வுவமையின் இரு நாயகர்களை இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளிலேயே பல ஆழமான கருத்துக்களை நமக்கு இயேசு சொல்லித்தருகிறார். இந்த அறிமுகத்திற்குச் செவிமடுப்போம்:
லூக்கா நற்செய்தி 16:19-21
இயேசு அவர்களிடம் கூறியது: செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த அறிமுக வரிகளில் செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
• செல்வர் ஒருவர் இருந்தார்.
• விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
• நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
என்பன செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள்.
• இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
• அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
• அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
• செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
• நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
என்பன இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர்கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை.

தெருவில் செல்லும் ஒருவரை நிறுத்தி, உங்களுக்கு Bill Gatesஐத் தெரியுமா என்றோ, அல்லது, Barack Obamaவைத் தெரியுமா என்றோ கேட்டால், அவர்களில் பலர், ‘தெரியும்’ என்றே சொல்வர். அதே ஆள்களிடம், அவர்கள் தெருவைச் சுத்தம் செய்யும் தொழிலாளி, அல்லது, அவர்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்பவரின் பெயர் என்ன என்று கேட்டால், அவர்களால் பதில் சொல்லமுடியுமா என்பது சந்தேகம்தான். ஒரு சிலருக்கு, அவர்கள் வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கும் பணியாளர்களின் பெயர்களே தெரிந்திருக்காது.
பணம், புகழ், பதவி இவற்றுடன் வாழ்பவரின் பெயர்கள் பலருக்கு நினைவில் இருக்கும், சாதாரண, எளிய மனிதர்களுக்கு பெயர்கள் உண்டா என்பதே சந்தேகம்தான். இயேசுவின் காலத்திலும் இதே நிலைதான். வசதி படைத்தவர்கள், அதிகாரத்தில் இருந்தோர் ஆகியோரின் பெயர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், எளிய, சாதாரண மனிதர்களின் பெயர்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

இத்தகைய ஒரு சூழலில், இயேசு நம் உவமையின் இரு நாயகர்களை அறிமுகப்படுத்திய இந்த வரிகள் இஸ்ரேல் மக்களுக்கு, குறிப்பாக, மதத் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இவ்வுவமைக்குரிய தனிச் சிறப்பு. தனித்துவமான இச்சிறப்பு தெருவில் கவனிப்பாரற்று கிடந்த ஓர் ஏழைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவற்றை இறைவனின் சாபமாகவும் எண்ணிவந்தனர் இஸ்ரயேல் மக்கள். அவர்கள் எண்ணங்களுக்கு ஒரு சவாலாக இயேசு தந்த இந்த அறிமுகம் அமைந்தது. கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில், ஏழை மனிதருக்கு இலாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலாசர் என்ற இந்தப் பெயர் பழைய ஏற்பாட்டில் காணப்படும் எலியேசர் என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன் எலியேசர். இந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர் இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்தவர் பெயரில்லாத செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.

ஏழைகள் எவ்வித அடையாளமும் இல்லாதவர்கள் என்று எண்ணி வந்த இஸ்ராயல் மக்களை அவசரப்பட்டு கண்டனம் செய்யவேண்டாம். இதே மனநிலைதானே இன்றும் நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப்பற்றி பேசும்போது, அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிடாமல், அப்பெயருக்கு முன் திருவாளர், திருமதி என்ற அடைமொழிகளையும் இணைக்கிறோம். ஏழைகளைப்பற்றிப் பேசும்போது, அவர்களை மரியாதை குறைந்த அவன், அவள், அது என்ற ஏக வசனத்தில் பேசுகிறோம், அல்லது, ஏழைகளை எண்ணிக்கையாக மட்டுமே குறிப்பிடுகிறோம். “திருவாளர் மாணிக்க வள்ளலார் அவர்கள் வழங்கிய கொடைகளைப் பெறுவதற்கு, நூற்றுக்கணக்கான ஏழைகள் கூட்டம் அலைமோதியது” என்பதுதானே நமது பேச்சு வழக்கு? ஏழைகளை எண்ணிக்கைகளாகக் கணக்கிடாமல், அது, இது என்ற ஏகவசனத்தில் குறிப்பிடாமல், மனிதப் பிறவிகளாக மதிக்கவேண்டும் என்பதற்கு இயேசு தன் உவமையில் கூறியுள்ள முதல் ஒப்புமை நல்லதொரு பாடம்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது.
• செல்வர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
• இலாசர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.

இலாசர் என்ற அர்த்தமுள்ள பெயரின் வழியாக ஏழைக்கு அறிமுகமும், அடையாளமும் தந்த இயேசு, செல்வருக்குத் தரும் அறிமுக அடையாளங்கள் பரிதாபமாகத் தெரிகின்றன. செல்வரின் அடையாளம் அவர் உடுத்தியிருந்த உடைகளால் வந்தது என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறார். கூட்டங்களில் நாம் ஒருவரை அடையாளம் காண்பதற்கு, அல்லது அவரைக் குறித்து மற்றவர்களிடம் கூறுவதற்கு வெளி அடையாளங்களைப் பயன்படுத்திப் பேசுவதை எண்ணிப் பார்க்கலாம். "அந்தச் சிவப்புக் காரில் வந்து இறங்கினாரே... அந்த நீல நிற பட்டுப்புடவை அணிந்திருந்தாரே... பச்சை வரை மோதிரம் அணிந்திருந்தாரே... அவர்தான்" என்று வெளி அடையாளங்களை வைத்து ஒருவரை குறிப்பிடும் நம் போக்கை இயேசு குத்திக்காட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மனிதர்கள் என்ற உயர்ந்த அடையாளம் உள்ளிருந்து வருகிறது என்பதை மறுத்து, நாம் உடுத்தும் உடைகள் அல்லது அணியும் அணிகலன்கள், பயன்படுத்தும் வாகனம் போன்ற வெளி பொருட்களால் நமது இலக்கணம் வகுக்கப்படுகிறது என்பதைச் சொல்ல "நீ உடுத்தும் உடைதான் நீ" என்றோ, "நீ ஓட்டிச் செல்லும் வாகனமே உன்னை யாரென்று உலகறியச் செய்யும்" என்றோ சொல்லும் பல விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம். "ஆள் பாதி, ஆடை பாதி" போன்ற பழமொழிகளைப் பயன்படுத்துகிறோம். இத்தகைய விளம்பரப் புதுமொழிகளின், நாம் பயன்படுத்தும் பழமொழிகளின் ஆணிவேரை ஆட்டி வைக்கிறது, உடைகளைக் கொண்டு செல்வரை அறிமுகப்படுத்தும் இயேசுவின் இவ்வார்த்தைகள்.

செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுவது, மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத்தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். இலாசரின் நிலை, யோவான் நற்செய்தி 19ம் பிரிவின் துவக்கத்தில் நாம் வாசிக்கும் வரிகளை நினைவுறுத்துகின்றது.
யோவான் 19: 1-5
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, ' யூதரின் அரசே வாழ்க! ' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், ' அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள் ' என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்' என்றான்.
'இதோ மனிதன்' என்று ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தால், அவரது நிலை எவ்விதம் இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கலாம். உடலெங்கும் புண்ணாகி, இரத்தமயமாக நின்ற இயேசுவுக்குள் 'மனிதன்' என்ற சாயலைத் தேட வேண்டியிருந்தது. அதே நிலைதான் இலாசருக்கும். உடல் முழுவதும் புண்ணாகியிருந்த அவரை ஒரு மனிதர் என்று உணர மறுத்தார் செல்வர்.

இவ்விருவரையும் அறிமுகம் செய்யும் வரிகளில் நாம் காணும் மூன்றாவது ஒப்புமை, உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன. இந்த ஒப்புமையின் ஆழத்தையும், அதன் விளைவாக நிகழ்ந்தவற்றையும் அடுத்த வாரத் தேடலில் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.