2013-10-15 15:47:13

கற்றனைத் தூறும் அக்டோபர் 16 - உலக உணவு நாள்


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு நாள் சிறப்பிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதியன்று, ஐ.நா.வின் உணவு வேளாண்மை அமைப்பான FAO நிறுவப்பட்டதன் நினைவாக இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது. இன்று உலகில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறப்பிக்கப்படும் இந்நாளுக்கென 1981ம் ஆண்டு முதல் மையக் கருத்துக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
1981 மற்றும் 1982 ஆகிய முதல் இரு ஆண்டுகளில், "அனைத்திற்கும் முதன்மையானது உணவே" (Food Comes First) என்ற கருத்துடன் இந்நாள் கொண்டாடப்பட்டது. "அனைவருக்கும் உணவு" (Food for All) என்ற கருத்து 1995ம் ஆண்டும், "பசியிலிருந்து விடுதலைபெறும் மில்லென்னியம்" (A Millennium Free from Hunger) என்ற கருத்து 2000மாம் ஆண்டும் சிறப்பிக்கப்பட்டன. "உணவு பாதுகாப்பு, சத்துணவு, தகுதியான உணவு முறைகள்" (Sustainable Food Systems for Food Security and Nutrition) என்பது 2013ம் ஆண்டுக்கென குறிக்கப்பட்டுள்ள கருத்து.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் FAO அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகில் 1.3 பில்லியன், அதாவது, 130 கோடி டன் எடையுள்ள உணவு வீணாக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகில் வீணாகும் உணவின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, ஒரு இலட்சம் கோடி டாலர்கள்.
உலகில் வீணாகும் உணவைப்பற்றி விழிப்புணர்வை உருவாக்க, இவ்வாண்டு ஜூன் 5ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கென FAO தெரிவு செய்திருந்த மையக்கருத்து: Think. Eat. Save. Reduce Foodprint! அதாவது, சிந்திப்பாய், சாப்பிடுவாய், சேமிப்பாய். உணவுத் தடங்களைக் குறைப்பாய்!.

ஆதாரம் : Wikipedia / The Nation








All the contents on this site are copyrighted ©.