2013-10-15 16:27:17

'அல்லா' என்ற வார்த்தை திருவழிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும், கோலாலம்பூர் பேராயர்


அக்.15,2013. மலேசியாவில் கிறிஸ்தவ வெளியீடுகளில் 'அல்லா' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது குறித்து மலேசிய நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதிகமாக அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் பேராயர் மர்ஃபி பாக்யம் அவர்கள் குறை கூறியுள்ளார்.
'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, "Herald Malaysia" என்ற கத்தோலிக்க வார இதழில், அவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும், இத்தீர்ப்பு, தாங்கள் எதிர்பார்த்ததே என்றும் Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் பேராயர் பாக்யம்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்த பேராயர் பாக்யம், 17ம் நூற்றாண்டிலிருந்தே, மலேசியாவில் கத்தோலிக்கர் கடவுளைக் குறிப்பதற்கு 'அல்லா' என்ற வார்த்தையையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 'அல்லா' என்ற வார்த்தை திருவழிபாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் கோலாலம்பூர் பேராயர் கூறியுள்ளார்.
2 கோடியே 90 இலட்சம் மக்களைக் கொண்ட மலேசியாவில் 60 விழுக்காட்டினர் முஸ்லீம்கள், 19 விழுக்காட்டினர் புத்தமதத்தினர், 6 விழுக்காட்டினர் இந்துக்கள், 6 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் 3 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.