2013-10-14 16:25:13

ஸ்பெயின் மறைசாட்சியர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த ஒளிச் செய்தி


அக்.14,2013. கிறிஸ்துவின் மீது நாம் கொள்ளும் அன்பு, தவணை முறையில் வெளிப்படும் அன்பு அல்ல, அது மரணம் முடிய நம்மை முற்றிலும் ஈர்க்கும் அன்பு என்பதை உலகறியச் செய்பவர்கள் மறைச்சாட்சிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டின் Tarragona எனும் இடத்தில், அந்நாட்டைச் சேர்ந்த 522 மறைசாட்சியர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்படும் நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒளிச் செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் மரியன்னை நாள் திருப்பலியாற்றிய பின், திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையின் துவக்கத்தில் அவர் வழங்கிய இந்த 3 நிமிடச் செய்தி, Tarragona வளாகத்தில் நேரடியாக ஒளிபரப்பானதை அங்கு கூடியிருந்த 30,000க்கும் அதிகமானோர் கண்டனர்.
இச்செய்திக்குப் பின்னர், ஸ்பெயின் நாட்டில் 1930களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், பொது நிலையினர் என்ற 522 பேர் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கும் திருப்பலி, கர்தினால் Angelo Amato அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.