2013-10-14 15:18:28

வாரம் ஓர் அலசல் – கிராமத்துப் பெண்கள்


அக்.14,2013. RealAudioMP3 கடந்த வாரத்தில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை அச்சுறுத்தி வந்த ‘பைலின்’ புயல் ஆள்சேதங்களைக் குறைத்து கரையைக் கடந்துவிட்டது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் பலத்த சேதமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசுகள் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்துவிட்டன. இந்த பைலின் புயல், கடந்த சனிக்கிழமை காலையில் குறைவான உயிர்ப்பலிகளோடு கரையைக் கடந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட மற்ற பாதிப்புக்கள் கடந்த 14 ஆண்டுகளாக இல்லாதவை என கூறப்படுகிறது. இது குறித்து கூறிய ஒடிசா வருவாய்த்துறை அமைச்சர் பட்ரோ, பைலின் புயல் காரணமாக 90 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு்ளளனர். 12 மாவட்டங்களில் உள்ள 14,514 கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 கோடியே 34 இலட்சம் வீடுகள் சேதமாகி உள்ளன. 5 இலட்சம் ஹெக்டர் பயிர்கள் நாசமாகிவிட்டன. இந்த வகையில், 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். மேலும், இந்த பைலின் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்புப் பணிகள் சவாலாக இருக்கும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பைலின் புயல் காரணமாக ஒடிசாவில் 9 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் பைலின் புயல் போன்ற பேரிடர் இதற்குமுன் ஏற்பட்டதில்லை என்றும், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் இயல்புநிலை விரைவில் திரும்பும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார். மேலும், ஒடிசாவிலிருந்து, வடக்கு நோக்கி நகர்ந்த பைலின் புயல், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்யவும் காரணமாகியுள்ளது.
அன்பர்களே, இயற்கைப் பேரிடரோ, உள்நாட்டுக் கலவரமோ, பஞ்சமோ, பசி பட்டினியோ எதுவாக இருந்தாலும், இவற்றால் முதலில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும் குழந்தைகளும். ஆனால் சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாதவர்களாக இருப்பவர்களும் பெண்களே. குறிப்பாக, குடும்பங்கள் பசியின்றி வாழவும் குடும்பத்தின் உரிமைகளைப் பெற்றுத்தரவும் பெரிதும் உதவுகின்றவர்கள் பெண்களே. கிராமங்களுக்கு ஒருமுறை சென்றுவந்தால் பெண்களின் அருமை பெருமைகள் புரியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானில், இஸ்லாம் தீவிரவாதக் கொள்கையுடைய தலிபான்கள், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இவர்களின் பெண்கல்விக்கு எதிரான கொள்கையை முறியடிப்பதற்கு உழைத்த சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு, இவர்கள் குண்டுவீச்சுத் தாக்குதலைப் பரிசாகக் கொடுத்தனர். கடந்த வியாழனன்று ஐரோப்பிய சமுதாய அவையின் Sakharov மனித உரிமைகள் விருது பெற்றுள்ள மலாலாவை, இந்தத் தலிபான்கள் மீண்டும் தாக்குவதற்கு முயற்சிப்பதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. சிறுமி மலாலா, சாதாரண ஒரு கிராமத்திலிருந்து உருவானவர்.
இதே ஆப்கானிஸ்தானில் இன்றும் பெண்கள் இஸ்லாம் தீவிரவாதக் கொள்கைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். காபூல் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 13 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு பெண், தனது கணவரின் குடும்பத்தினரால் உடலில் அனுபவித்த சித்ரவதைகளயும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளையும் சிபிசி கானடா நாட்டு ஊடகத்திடம் காட்டி தனது நிலையை விளக்கியுள்ளார். ஏழு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண்ணை அவரின் கணவர் கைவிட்டு விட்டார். இப்போது தனது ஏழு பிள்ளைகளுடன் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்துவரும் இப்பெண், தனது பிள்ளைகளை தனது கடின உழைப்பால் பராமரித்து அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களையும் வழங்கி வருகிறார். மேலும், இதே கிராமத்தில் இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தனக்குரிய வீட்டுமனையை மீட்பதற்கு எதிர்கொண்ட துன்பங்களை இதே சிபிசி ஊடகத்திடம் விவரித்துள்ளார். ஒரு பாழடைந்த இடத்தில் தானே மண்சுவர்களை எழுப்பி கட்டியுள்ள ஒரு வீட்டைக் காட்டி, அந்த வீட்டைக் கட்டியபோது தன்னை மட்டுமல்ல, தனது மகளையும் மகனையும்கூட அந்தக் கிராமத்துத் தலைவரின் ஆள்கள் தாக்கினர் என்றும், அந்த நிலத்தை அத்தலைவர் எடுத்துக் கொள்வதற்கு முயற்சித்தார், அந்த மனிதர்கள் ஆயுதங்களோடு தாக்கினர், ஆனால் நான் எனது கையாலே அவர்கள் ஆடைகளைக் கிழித்துத் தாக்கினேன், கடைசிவரை உறுதியாக இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இப்படிப் பெண்கள், தங்கள் கணவர்களாலும், சொந்தக் குடும்பத்தினராலும் கைவிடப்பட்டாலும் தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றி அவர்களை நல்ல நிலையில் வைக்க உழைத்து வருகின்றனர். இதே ஆப்கானிஸ்தானில் பெண்களைக் கல்லால் எறிந்து கொல்லும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
RealAudioMP3 ஆப்ரிக்காவின் கென்யாவில் Umoja என்ற ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர். பாலைவனமாகத் தோற்றமளிக்கும் இப்பகுதியில் முட்புதர்களும், விஷத் தேள்களும் பாம்புகளும் அதிகம். இவ்விடத்துக்கு அருகிலுள்ள Ewaso ஆற்றில் முதலைகளும் அதிகம். ஆயினும் இப்பெண்கள் தங்களுக்கென மரக்கிளைகளாலும், பசுமாட்டின் சாணத்தாலும் குடிசைகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என பிபிசி ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது. 48 பெண்கள் வாழும் இச்சிறிய கிராமத்துக்கு முள்கம்பிகள் அரணாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெண்கள் பாசிகளினால் நகைகள் செய்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத் தலைவி Rebecca Lolosoli என்பவரின் எண்ணத்தில் உருவானதே இக்கிராமம். Samburu பூர்வீக இனத்தைச் சேர்ந்த Lolosoli, அக்கிராமக் கூட்டத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும், இன்னும் தனது கணவர், மாமனார் ஆகியோரை எதிர்த்துப் பேசியதற்காகவும் அக்கிராமத்தினரால் பலமாக அடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது அவர் சிந்தையில் உருவானதே Umoja பெண்கள் கிராமம். Samburu கலாச்சாரத்தில் பெண்கள் சிறார் போன்று நடத்தப்படுவர் எனவும், அவர்கள் போதுமான பயிற்சி பெறாதபோது பலமாக அடிக்கப்படுவர் எனவும், பெண்கள் ஆண்களை அடித்துவிட்டால் அவர்கள் கொல்லப்படுவர் எனவும் கூறப்படுகிறது.
இக்காலத்தில் கிராமப்புறப் பெண்கள் பல நிலைகளில் விழிப்புணர்ச்சி அடைந்திருந்தாலும், நகர்ப்புற பெண்களுக்கு கிடைக்கும் வசதிகள், கிராமப்புற பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதி கிராமங்கள்தான். இங்கு வாழும் பெண்களின் முக்கிய தொழில் விவசாயம். இவர்கள் வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல், விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் செய்கின்றனர். இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், இவர்களது பணி தொடர்கிறது. கிராமப்புற குடும்பங்களில், பெண்களின் வருமானமும் முக்கிய தேவையாக உள்ளது. எனவே, உலக அளவில் “பழங்குடி இனப் பெண்கள் உட்பட கிராமப்புற பெண்கள் செய்துவரும் பணிகளை அங்கீகரித்து அப்பெண்களின் மாண்பை உயர்த்தும் நோக்கத்திலும், வேளாண் மற்றும் கிராம வளர்ச்சியை ஊக்குவித்து உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி கிராமப்புற ஏழ்மையை ஒழிக்கும் நோக்கத்திலும் ஐ.நா.பொது அவை 2007ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி அனைத்துலக கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்பெண்கள், உலகின் பசியைப் போக்கவும், வறுமையை ஒழிக்கவும் பெரும்பங்கு ஆற்றுகின்றனர் என்று சொல்லி, கிராமப்புறப் பெண்கள் தினத்தை, அக்டோபர் 16ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக உணவு தினம், அக்டோபர் 17ம் தேதி சிறப்பிக்கப்படும் வறுமை ஒழிப்பு தினம் ஆகியவற்றோடு தொடர்புடையதாகக் குறித்துள்ளது ஐ.நா.நிறுவனம்.
இத்தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களும், உலகின் பசியையும் ஏழ்மையையும் அகற்றுவதில் கிராமப்புறப் பெண்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. இப்பெண்களின் உரிமைகளையும் வாய்ப்புக்களையும் மறுப்பது, அவர்களின் குழந்தைகளுக்கும் சமூகங்களுக்கும் நல்லதோர் எதிர்காலம் அமைவதைப் புறக்கணிப்பதாகும் என்று கூறியுள்ளார். உலக உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்குதான் அதிகம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட வேளாண்துறையின் முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 60 விழுக்காட்டுப் பெண்கள், விவசாயப் பணிகளில்தான் ஈடுபடுகின்றனர். கிராமப்புற பெண்களின் வேலைநேரம், ஆண்களைவிட கூடுதலாக உள்ளது. கிராமப்புற பெண்களின் தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், இலவச மருத்துவப் பரிசோதனை, நலவாழ்வு உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு செய்து தருவது ஒவ்வோர் அரசின் கடமை. இது ஏட்டளவில் இல்லாமல் செயலில் காட்டப்பட வேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, புதிது புதிதாக முளைக்கும் பலஅடுக்கு அங்காடிகள், உயரமாக எழும்பும் கட்டிடங்கள், உணவகங்கள் அல்ல. வளர்ச்சி என்பது நகரங்களில் இருக்கும் அடிப்படை வசதிகளை கிராமங்களும் பெறுவதாகும், கிராமத்துப் பெண்களின் உழைப்புகள் ஏற்கப்படுவதாகும். வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாட்டுக் குடிமகனிடம் காணப்படும் உண்மையான மகிழ்ச்சியாகும். முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடிமனிதரிடமும் சாதிக்க வேண்டுமென்று எழுகின்ற தீவிர முயற்சி. கிராமத்துப் பெண்களே, நிராகரிக்கப்படுவதை நிராகரியுங்கள். எதையும் பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கியே பாருங்கள். நீங்கள் எதைச் சாதிக்கவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதையே பாருங்கள், நிச்சயம் முன்னேறுவீர்கள்.







All the contents on this site are copyrighted ©.