2013-10-14 16:24:14

பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன்னிலையில் திருத்தந்தையுடன் மாலை செப வழிபாடு


அக்.14,2013. அக்டோபர் 12, சனிக்கிழமை மாலை 5 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்திலிருந்து விமானம் வழியே வத்திக்கான் வந்தடைந்த பாத்திமா அன்னை மரியாவின் திருஉருவத்தை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வணக்கத்துடன் வரவேற்றார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஓர் உச்சக் கட்டமாக அமைந்த மரியன்னை நாள் கொண்டாட்டங்களுக்கென தருவிக்கப்பட்டிருந்த பாத்திமா அன்னை திரு உருவத்தின் முன்னிலையில் சனிக்கிழமை மாலை செப வழிபாட்டை, திருத்தந்தை முன்னின்று நடத்தினார்.
இந்த மாலை செபவழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை வழங்கிய உரையில், மரியன்னையின் நம்பிக்கையை மூன்று கோணங்களில் விவரித்தார்.
பாவத்தால் விழுந்த முடிச்சை அவிழ்ப்பது மரியன்னையின் நம்பிக்கை, இயேசுவை உடலளவில் உலகிற்குக் கொணர்ந்தது மரியாவின் நம்பிக்கை, மற்றும் தொடர்ந்து பயணம் செய்வது மரியாவின் நம்பிக்கை என்ற மூன்று அம்சங்களில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் புனித பேதுரு வளாகத்தில் நுழைந்த அன்னை மரியாவின் திரு உருவம், வளாகமெங்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியில் 5 மணியளவில் திருத்தந்தையால் வணக்கம் செய்யப்பட்ட பின்னர், தனிப்பட்ட ஒரு பீடத்தில் வைக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.