2013-10-14 16:21:14

நாம் ஒவ்வொருவரும் முழு நேர கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா? - திருத்தந்தையின் கேள்வி


அக்.14,2013. மாறிவரும் உலகை மட்டும் முன்னிறுத்தி, நிலையானவை, நிரந்தரமானவை ஆகிய உண்மைகளைப் புறந்தள்ளும் இவ்வுலகத்தில், நாம் ஒவ்வொருவரும் முழு நேர கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பினார்.
அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், 1,50,000க்கும் அதிகமாகக் கூடியிருந்த மரியன்னை பக்தர்களுக்குத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இக்கேள்வியை எழுப்பினார்.
இறைவன் நம்மை வியப்பில் ஆழ்த்துதல், இறைவன் மட்டில் பற்றுறுதியுடன் வாழ்தல், இறைவனே நமது சக்தியென வாழ்தல் என்ற மூன்று உண்மைகளை மரியன்னையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்று தன் மறையுரையில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஏழ்மை, சக்தியற்ற நிலை, தாழ்மை என்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்தும் இறைவன், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த இறைவனை தன் வாழ்வில் முழுமையாக உணர்ந்தவர் மரியா என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் நாம் வாழ்வைத் தொடர விரும்புகிறோமா அல்லது, நம்மை வியப்பில் ஆழ்த்தி, புதிய சவால்களைத் தரும் இறைவனிடம், மரியன்னையைப் போல சரணடைய விரும்புகிறோமா என்ற கேள்வியை திருத்தந்தை முன்வைத்தார்.
மரியா இறைவனுக்குச் சொன்ன 'ஆம்' என்ற பதில்மொழி, அவர் வாழ்ந்த அமைதியான கிராம வாழ்வை மாற்றியது மட்டுமல்லாமல், தொடர்ந்து பல சவால்களைக் கொணர்ந்தது என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, அந்தச் சவால்கள், சிலுவையடியில் அவர் கூறிய இறுதி 'ஆம்' என்ற பதிலுரை மட்டும் அவரை அழைத்துச் சென்றது என்று கூறினார்.
தொழுநோயுற்ற பத்து பேரை இயேசு குணமாக்கியதைக் கூறும் இந்த ஞாயிறு நற்செய்தியைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, இறைவனிடம் வேண்டுதல் எழுப்பியது பத்து பேர் என்றாலும், ஒருவர் மட்டுமே தான் பெற்ற நன்மைக்கு நன்றி சொல்லத் திரும்பினார் என்பதைச் சுட்டிக்காட்டி, நமது நன்றி உணர்வு குறித்து கேள்விகளையும் முன்வைத்தார்.
நன்றி என்று சொல்வது எளிதாகவும், கடினமாகவும் உள்ள ஒரு செயல் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பெறும் அனைத்து நன்மைகளும் நமது உரிமை என்ற எண்ணம் கொண்டிருப்பதால், நாம் பிறருக்கும், இறைவனுக்கும் நன்றி கூறும் கடமையை நிறைவேற்ற மறக்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.