2013-10-14 15:17:14

கற்றனைத்தூறும் ... முடிச்சுக்கள்


16ம் நூற்றாண்டில் தென் அமெரிக்கக் கடற்கரையில் ‘இன்கா’ என்ற நாகரிகம் உச்சத்தில் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது முடிச்சுக்கள். இம்மக்கள் ஆவணங்களை முடிச்சுக்கள் மூலமாகப் பாதுகாத்து வந்தனர். அப்பழக்கத்தை, க்விப்பூ(quipu) என்று அழைத்தனர். அந்த முடிச்சுக்கள் மூலம் சில புள்ளி விபரங்களைப் பதிவு செய்ய அவர்கள் பழகியிருந்தனர். வெள்ளை முடிச்சு வெள்ளியையும், மஞ்சள் முடிச்சு தங்கத்தையும், சிவப்பு முடிச்சு இரத்தத்தையும் குறிப்பதாக இருந்தது. ஒவ்வோர் ஊரிலும் நியமிக்கப்பட்ட அலுவலகர்கள் அந்த முடிச்சு ஆவணங்களைப் பராமரித்து வந்தனர். பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் பல நூற்றாண்டளவாக, முடிச்சுக்கள் மூலம் மக்கள் தங்கள் ஆடு, மாடு போன்வற்றின் கணக்கை வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்நாடுகளில் வாழும் பழங்குடி மக்கள் இன்றும் இப்பழக்கத்தைக் கையாள்வதாகச் சொல்லப்படுகின்றது.
சீனர்கள் எழுத்துக்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் முடிச்சுக்களைப் புழக்கத்தில் வைத்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அரேபியர்கள் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும், இரசீதுகள் கொடுக்கவும் முடிச்சுக்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ‘அக்த்’ என்ற அராபியச் சொல்லுக்கு, முடிச்சு என்ற பெயரும், ஒப்பந்தம் என்ற பொருளும் உள்ளன.
பாரசீக மன்னன் டேரியஸ் ஒரு தோல்பட்டையில் ஆறு முடிச்சுக்களை முடிந்து கொடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். கடைசி முடிச்சு அவிழ்க்கப்படும்போது, தான் போர்க்களத்திலிருந்து திரும்பி வராவிட்டால் கைதாகியிருக்கும் எதிரிகளை அவர்கள் சொந்த நாட்டுக்கேத் திருப்பிப் போய்விடுமாறு கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : புத்தகம்-ஏழாவது அறிவு







All the contents on this site are copyrighted ©.