2013-10-12 15:50:54

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை பெண்களின் பங்கை மதிக்கிறது


அக்.12,2013. பொதுவாழ்விலும் திருஅவை வாழ்விலும் பெண்களின் பங்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் எழுதிய Mulieris dignitatem அதாவது பெண்களின் மாண்பு குறித்த திருமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டையொட்டி வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 150 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், தாய்மையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
Mulieris dignitatem திருமடல், முழுவதும் பெண்கள் குறித்தே எழுதப்பட்டுள்ள திருத்தந்தையரின் முதல் ஆசிரிய வெளியீடு என்று அதனைப் பாராட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், கடவுள் மனிதரை, சிறப்பான விதத்தில் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார், அது தெளிவாக தாய்மையில் வெளிப்படுகின்றது என்று கூறினார்.
கலாச்சார மற்றும் சமுதாய வாழ்வில் பல விடயங்கள் மாற முடியும், ஏன் பல விடயங்கள் மாற்றம் அடைந்துள்ளன, ஆனால் ஒரு பெண் தனது வயிற்றில் கருத்தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மை மட்டும் அப்படியே இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
ஆயினும், பெண்மையையும், அவரது அழைப்பையும் அழிக்கும் இரு ஆபத்துக்கள் உள்ளன, ஒரு சமூகப் பணிக்குள் தாய்மையை முடக்கிவிடுவது அவற்றுள் ஒன்று என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், பொதுவாழ்விலும் திருஅவை வாழ்விலும் பெண்களின் பங்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.