2013-10-12 16:00:22

இயற்கைப் பேரிடர்கள் குறித்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படவேண்டும், ஐ.நா.பொதுச்செயலர்


அக்.12,2013. இயற்கைப் பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், அவை தொடர்பான பொதுவான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை மாற்றுத்திறனாளிகளைப் போதுமான அளவு சென்றடையாததால், இயற்கைப் பேரிடர்கள் குறித்த திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளும் இணைக்கப்படவேண்டுமென்று கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு நாள், அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
இவ்வுலகில் நூறு கோடிக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்றும், இவ்வாண்டு இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு நாள், இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு குறித்த விழிப்புணர்வு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளின் பங்கை உணருவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
இதற்கிடையே, தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவுப் பகுதியில் ஏறக்குறைய 250 குடியேற்றதாரரை ஏற்றிவந்த படகு, இவ்வெள்ளியன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரத்தில் இதே பகுதியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 300 குடியேற்றதாரர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.