2013-10-11 16:59:18

போரைப் புறக்கணிக்கும் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஜப்பானிய ஆயர் எதிர்ப்பு


அக்.11,2013. ஜப்பானில் இராணுவத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு அனுமதிக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் 1947ம் ஆண்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Peter Takeo Okada.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு எண் 9ல், நீதி மற்றும் ஒழுங்குமுறையை அடிப்படையாகக்கொண்ட அனைத்துலக அமைதியை உண்மையாகவே ஆதரிக்கும் ஜப்பானிய மக்கள், போர், அந்நாட்டின் இறையாண்மை உரிமை என்பதையும், அனைத்துலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதையும் என்றென்றும் புறக்கணிக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கும் அரசியல் அமைப்பின் இந்த எண் குறித்து ஜப்பானியர்கள் பெருமைப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் Okada, இதில் மாற்றம் கொண்டுவருவதற்கு பிரதமர் Shinzo Abe எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
12 கோடியே 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஜப்பானில் 2 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.