2013-10-11 17:01:31

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க ஐ.நா. வலியுறுத்தல்


அக்.11,2013. சிறுமிகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும் வன்முறைகளும் களையப்பட்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது, இவ்வுலகின் மனிதக் குடும்பம் முன்னேறுவதற்கு இன்றியமையாதவை என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
சிறுமிகளுக்குக் கல்வி வழங்குவதே இவற்றை அடைவதற்குச் சிறந்தவழி என்றும், பல நாடுகளில் பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில் பல சிறுமிகளுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் பான் கி மூன் மேலும் கூறியுள்ளார்.
அக்டோபர் 11, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக பெண் குழந்தைகள் தினச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன், பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளிலும் பலர் பாகுபாட்டையும் வன்முறையையும் எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
"பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இவ்வாண்டின் இத்தினத்தின் மையக்கருத்தாகும்.
சிறுமிகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதியன்று ஐ.நா. பொது அவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியன்று அனைத்துலக சிறுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.