2013-10-10 15:56:11

இறையருள் என்ற பரிசு சுற்றப்பட்டிருக்கும் தாளைப்போல நமது செபங்கள் உள்ளன - திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.10,2013. இறையருள் என்ற பரிசு சுற்றப்பட்டிருக்கும் தாளைப்போல நமது செபங்கள் உள்ளன என்றும், இறையருள் என்ற பரிசை வேண்டி நாம் எழுப்பும் செபங்களின் பயனாக நமக்குக் கிடைக்கும் பரிசு இறைவனே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றியபோது, நள்ளிரவில் உதவி கேட்டுச்சென்ற நண்பரைக் குறித்த உவமையை தன் மறையுரையின் மையமாக்கினார்.
இறையருளை வேண்டி நாம் செபங்களை எழுப்பும்போது, இறைவன் தன் அருளை மட்டுமல்ல, தன்னையே நமக்கு வழங்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் வழங்கும் அருள், மின்னஞ்சல் வழியாக ஒருபோதும் நம்மை வந்து சேர்வது கிடையாது, மாறாக, அவரே நம்மைத் தேடி வந்து தன் அருளை வழங்குகிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
நற்செய்தியில் நாம் காணும் பத்து தொழுநோயாளர்களைப் போல, நம்மில் பலர் நமக்குச் சேரவேண்டிய அருள் கிடைத்ததும், சென்று விடுகிறோம். நம்மில் வெகு சிலரே திரும்பிவந்து இறைவனுக்கு நன்றி சொல்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நாம் எழுப்பும் செபங்களின் பயனாக, நம்மை வந்தடையும் அருள் என்னவென்று அறிந்துகொள்ள நமக்கு துணிவு வேண்டும், ஏனெனில், நாம் வேண்டும் அருளைக் காட்டிலும், நம்மை வந்தடைவது இறைவனே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.