2013-10-10 16:08:09

Lampedusa விபத்தில் இறந்தொருக்கென புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி


அக்.10,2013. மனதில் பல கனவுகளைச் சுமந்து Lampedusa தீவை நோக்கி வந்த நமது சகோதர சகோதரிகளின் எண்ணங்கள் முழுமை அடையவில்லையெனினும், அவர்களை இறைவனின் அணைப்பில் நாம் ஒப்படைப்போம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்டோபர் 3, கடந்த வியாழனன்று இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள Lampedusa தீவை நோக்கிவந்த படகு விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் இறந்தொருக்கென அக்டோபர் 9, இப்புதனன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியாற்றிய கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இச்சிறப்புத் திருப்பலியில், ஆப்ரிக்காவைச் சேர்ந்த எத்தியோப்பியா, எரித்ரியா, மற்றும் மார்கே ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த 22 ஆயர்களும், நாற்பது அருள் பணியாளர்களும், நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வழங்கிய மறைபோதகத்திற்குப் பின்னர், ஆப்ரிக்க ஆயர்களை புனித பேதுரு வளாகத்தில் சந்தித்து, தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.