2013-10-09 16:06:03

"பெர்கோலியோவின் பட்டியல்" - திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல்


அக்.09,2013. அர்ஜென்டீனா நாட்டில், இராணுவத் தளபதி Jorge Rafael Videlaன் சர்வாதிகார ஆட்சி நடந்தபோது அங்கு இயேசு சபை மாநிலத் தலைவராகப் பணியாற்றிய அருள் பணியாளர் Jorge Mario Bergoglio அவர்கள், இந்த ஆட்சியின் கொடுமைகளிலிருந்து 100க்கும் அதிகமானோரைக் காப்பாற்றினார் என்பதை எடுத்துரைக்கும் நூல் ஒன்று அண்மையில் வெளியானது.
"Bergoglio's List" அதாவது, "பெர்கோலியோவின் பட்டியல்" என்ற பெயரில் இத்தாலிய எழுத்தாளர் Nello Scavo என்பவர் வெளியிட்டுள்ள இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா இயேசு சபை மாநிலத் தலைவராக பணியாற்றியபோது, பலரைக் காப்பாற்றினார் என்பதை இந்நூலில் கூறியுள்ளார்.
இயேசு சபை மாநிலத் தலைவர் என்ற அளவில் பெர்கோலியோ அவர்கள் செய்த இந்த உதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் பகிர்ந்துள்ள தங்கள் சொந்த அனுபவத்தைத் தொகுத்து, Scavo அவர்கள் இந்நூலை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் நாட்டு வர்த்தகர் Oscar Schindler என்பவர், நாத்சி அடக்கு முறையின் கொடுமைகளிலிருந்து யூதர்களைக் காப்பாற்றிய வரலாறு "Schindler's List" என்ற நூலாக வெளியானதைப்போல, "Bergoglio's List" என்ற இந்நூலில் அருள் பணியாளர் பெர்கோலியோ அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களின் அனுபவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"பெர்கோலியோ பட்டியல்" என்று எதுவும் வரலாற்றுக் குறிப்பாக இல்லை என்பதைத் தெளிவாக்கும் இந்நூலின் ஆசிரியர் Scavo அவர்கள், தான் ஆற்றிய இப்பணியைக் குறித்து திருத்தந்தை அவர்கள் எப்போதும் பேசியதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.