2013-10-09 16:11:53

நீரைப் பகிரும் முயற்சிகளைத் தீவிரமாக்காவிடில் நாடுகளிடையே மோதல்கள் உருவாகும் - ஐ.நா. பொதுச்செயலர்


அக்.09,2013. மனித சமுதாயத்தின் நலன், உணவு பாதுகாப்பு, மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தண்ணீர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 8ம் தேதி, இச்செவ்வாய் முதல் 11ம் தேதி வருகிற வெள்ளிக்கிழமை முடிய Hungary நாட்டின் தலைநகரான Budapestல் நடைபெறும் தண்ணீர் உச்சி மாநாட்டினைத் துவக்கிவைத்து உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர், வாழ்வின் ஆதாரமான நீர் ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்களை மனிதர்களுக்கு அளிக்கிறது என்று கூறினார்.
உலகெங்கும் வேளாண்மைக்கென நல்ல நீர் பெருமளவில் பயன்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், இல்லங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் நீரின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
நீரின் தற்போதைய பயன்பாட்டில் கவனம் செலுத்தத் தவறினால், 2030ம் ஆண்டு, உலகின் பாதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் துன்புறும் நிலை உருவாகும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் எச்சரிக்கை விடுத்தார்.
நீரைப் பகிர்வதில் இன்னும் பெரும் முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்திய பான் கி மூன் அவர்கள், இந்த முயற்சிகளைத் தீவிரமாகச் சிந்திக்கத் தவறினால் நாடுகளிடையே பகைமையும், மோதல்களும் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.