2013-10-09 16:01:51

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக்.09,2013. இவ்வாரத்துவக்கத்திலிருந்தே உரோம் நகரில் அவ்வப்போது மழைதூறிக்கொண்டிருந்தாலும் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்திற்கு வழக்கமாக பெருமெண்ணிக்கையில் மக்கள் வருவதை மனதில்கொண்டு தூய பேதுரு வளாகத்திலேயே இவ்வார மறைபோதகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மழை இலேசான தூறலுடன் நின்றுவிட, விசுவாசிகளும் மகிழ்ச்சியுடன் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த சில வாரங்களாக கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து புதன் மறைபோதகங்களில் விளக்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக இப்புதனன்று, 'ஏக, பரிசுத்த,கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருஅவையை விசுவசிக்கின்றேன்' என நாம் விசுவாச அறிக்கையிடுகிறோம், அதில் வரும் 'கத்தோலிக்க' என்பது திருஅவையின் உலகளாவியத் தனமையைக் குறிப்பிடும் என, தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். 'கத்தோலிக்கம்' என்பதை நாம் மூன்றுவழிகளில் புரிந்துகொள்ளலாம். முதலில், திருஅவை கத்தோலிக்க திருஅவை என நாம் அறிக்கையிடுவதன் காரணம் என்னவெனில், தன் முழுமையிலும் அப்போஸ்தலிக்க விசுவாசத்தை திருஅவை அறிக்கையிடுகிறது. திருஅவையில்தான் நாம் கிறிஸ்துவின் திருவருள்சாதனங்களில் கிறிஸ்துவைச் சந்திக்கிறோம். மற்றும் நம் சகோதர சகோதரிகளுடன் இணைந்து புனிதத்துவத்தில் வளர்வதற்கான ஆன்மீகக் கொடைகளையும் திருஅவையில்தான் கிறிஸ்துவிடமிருந்து பெறுகிறோம். திருஅவையை கத்தோலிக்கம் என்கிறோம், ஏனெனில், அதன் ஒன்றிப்பானது அனைத்து இனத்தவரையும் அணைத்துக் கொள்கிறது, மற்றும், மீட்பின் மகிழ்வையும் நற்செய்தியின் உண்மையையும் முழு உலகுக்கும் எடுத்துரைக்க அது அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாக, திருஅவையை கத்தோலிக்கம் எனக்கூறுவதன் காரணம் என்னவெனில், தன் மக்களை ஒன்றிப்பிலும் இணக்கவாழ்விலும் கட்டியெழுப்ப, இறைவனின் உன்னதக் கொடைகளின் பன்மைத்தன்மையை ஒருமைப்படுத்துகின்றது. நம்மை மேலும் கத்தோலிக்கமாக மாற்றும்படி இறைவனை நோக்கி மன்றாடுவோம். மிகப்பெரும் குடும்பமாக, விசுவாசத்திலும் அன்பிலும் ஒன்றிணைந்து வளரவும், திருஅவையுடனான ஒன்றிப்பில் கிறிஸ்துவை நோக்கி மற்றவர்களை அழைத்துவரவும், ஒவ்வோர் அங்கத்தினர்களின் பங்களிப்பையும், கொடைகளையும் வரவேற்கவும், இறைவனின் மீட்பளிக்கும் அன்பு, அவரின் அருள், நன்மைத்தனம் ஆகியவைகளுக்கான மகிழ்வுநிறை இன்னிசையை எழுப்பவும் நமக்குத் தூண்டுதலளிக்குமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு, தன் புதன்பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.