2013-10-09 16:05:28

எருசலேமில் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஊர்வலம்


அக்.09,2013. மக்கள் ஒற்றுமையாக, அமைதியாக வாழ்வதைக் குலைக்கும்வண்ணம் ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களைச் சார்ந்த சிறுபான்மையினர் மேற்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்துள்ளனர் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் William Shomali அவர்கள் கூறினார்.
எருசலேமில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள், ஆகியவற்றின் மரியாதையைக் குலைக்கும்வண்ணம், யூத இனத்தைச் சார்ந்த ஒரு சிறுபான்மை குழுவினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை எதிர்த்து, அக்டோபர் 7, இத்திங்களன்று கிறிஸ்தவர்கள் ஓர் ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இந்த ஊர்வலம் எவ்வித முன்னறிவிப்பும், ஏற்பாடும் செய்யப்படாமல், மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட ஒரு முயற்சி என்று ஆயர் Shomali அவர்கள் கூறினார்.
திருக்கல்லறை பேராலயத்தில் கூடிவந்த கிறிஸ்தவர்கள், பின்னர், இலத்தீன் கத்தோலிக்க கல்லறைக்கும், ஆங்கிலிக்கன் கல்லறைக்கும் ஊர்வலமாகச் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், கிறிஸ்தவ துறவுமடங்கள், கோவில்கள், கல்லறைகள் ஆகிய இடங்களின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் அடிப்படைவாதக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.