2013-10-08 15:39:19

வியட்நாமில் மனச்சான்றின் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்


அக்.08,2013. வியட்நாமில் அரசியல் சார்ந்த தங்களது கருத்துக்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் 14 இளம் கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபை கிறிஸ்தவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அந்நாட்டின் சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபைத் தலைவர்களும், பல்வேறு புத்தமதப் பிரிவுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டு அந்நாட்டின் தேசிய அவை உறுப்பினர்களுக்கென வெளியிட்டுள்ள மனுவில், வியட்நாமில் நீதியும் மனித உரிமைகளும் மதிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் சிறை வைக்கப்பட்டுள்ள 14 இளம் கத்தோலிக்க மற்றும் பிரிந்தசபை கிறிஸ்தவர்களும், பிற மனச்சான்றின் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு அம்மனுவில் கேட்டுள்ளதோடு, கைதிகள்மீது சித்ரவதைகளைப் பயன்படுத்த வேண்டாமென்றும், அவர்களுக்கு மருத்துவ வசதிகள்பெற அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
வியட்நாம் அரசின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த நடவடிக்கைகள் பல்வேறு குழுக்களால் அண்மை மாதங்களாகத் தொடர்ந்து குறைசொல்லப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.